ரூ.7கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக விபத்து நாடகம்.. சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.2 கோடி இழந்தவர் ரூ.7 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக காருடன் எரிந்து விட்டதாக நாடகமாடியது தற்போது அம்பலமாகியுள்ளது. கவுண்டமணி – செந்தில் நடித்த இந்த நகைச்சுவைக் காட்சியைப் போல் இன்சூரன்ஸ் பணத்திற்காக தான் இறந்தது போல நாடகமாடிய கில்லாடி நபர் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம் வெங்கடாபுரத்தில் கடந்த மாதம் 9-ம்தேதி குளக்கரை அருகே எரிந்த நிலையில் ஒரு கார் நின்றது. இதுகுறித்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தேக்மால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காருக்குள் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக ஒருவரின் உடலும் இருந்தது. காரில் இருந்த அடையாளங்களை வைத்து இறந்தவர் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த தர்மநாயக் என போலீசார் கண்டுபிடித்தனர்.

இவர் மாநில செயலகத்தில் நீர்ப்பாசனத்துறையில் மூத்த உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவியும் வந்து உடலை அடையாளம் காட்ட, இறந்தவர் தர்மநாயக் என முடிவு செய்து உடற்கூராய்வு செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்கிய தர்மநாயக்கின் மனைவி மீண்டும் அவரது உடலை எரித்து இறுதி சடங்குகளை முடித்தும் விட்டார். இந்நிலையில், தர்மநாயக் மனைவி நீலா, கணவரின் இறப்பு சான்றிதழை வாங்கி இன்சூரன்ஸ் பணத்திற்காக விண்ணப்பித்துள்ளார். கணவர் இறந்த 10 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் பணத்திற்காக இறப்பு சான்றிதழ் பெற்று விண்ணப்பித்துள்ளது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எப்போது தர்மநாயக் இன்சூரன்ஸ் கட்டினார் போன்ற விவரங்களை போலீசார் சேகரிக்க தொடங்க அடுத்தடுத்த பல தகவல்கள் வெளியே வந்தன.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தர்மநாயக் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் ரூ.2 கோடி வரை இழந்திருப்பதும், உறவினர்கள் பலரிடம் கடன் வாங்கியிருப்பதும் தெரியவந்தது. தர்மநாயக் மனைவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது புனேவில் இருந்து அடிக்கடி ஒரு செல்போன் அழைப்பு வருவது தெரிந்தது. தொடர் விசாரணையில் புனேவில் இருந்து பேசியது இறந்ததாக கூறப்பட்ட அவரது கணவர் தர்மநாயக் என்பதும் தெரிந்தது. புனே சென்ற தெலங்கானா போலீசார் செல்போன் சிக்னலை வைத்து அவரை கண்டுபிடித்து கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

தெலங்கானா தலைமைச் செயலகத்தில் நீர்ப்பாசனத்துறையில் மூத்த உதவியாளராக பணியாற்றி வந்த தர்மநாயக், ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகமாக ஈடுபட்டுள்ளார். நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் ரூ.2 கோடி கடன் வாங்கி அனைத்து பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் பறிகொடுத்து இருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்க, தான் இறந்து விட்டதாக நாடகமாடி அவர்களையும் ஏமாற்றி விட்டு, இன்சூரன்ஸ் பணத்தை வாங்கி ஜாலியாக செலவு செய்ய திட்டமிட்டுள்ளார் தர்மநாயக்.

இதற்காக புதிதாக ஒரு காரை வாங்கிய தர்மநாயக், தான் கார் வாங்கியிருப்பதாக கூறி உறவினர், நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்டி கொடுத்துள்ளார். பின்னர் டிரைவருடன் காரில் வெளியே சென்ற தர்மநாயக், குளக்கரை அருகே காரை நிறுத்தி, டிரைவரை கொலை செய்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து காரில் தயாராக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி காருடன் சேர்த்து டிரைவரையும் எரித்து இருக்கிறார் தர்மநாயக்.

இதன்பிறகு புனே தப்பிச் சென்ற தர்மநாயக் அங்கிருந்து மனைவிக்கு செல்போனில் பேசியதாலும், அவர் பெட்ரோல் கொண்டு சென்ற கேன் எரிக்கப்பட்ட கார் அருகே கிடந்ததை வைத்தும் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தர்மநாயக்கின் மோசடி வேலைக்கு அவரது மனைவி நீலாவும் உடந்தையாக இருந்ததால் அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.