உக்ரைன் போருக்கு பின்னால் நின்று செயல்படும் மறை கரம்

உக்ரைனில் நடைபெற்றுவரும் போர் ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது.

ஆரம்பம் முதலே ரஸ்யா கூறிவருவதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த மோதலில் நேட்டோவினுடைய பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயே உள்ளது.

தன்னுடைய ‘கொண்டை’யை மறைக்க விரும்பாத அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு சென்று வந்ததன் மூலம் போரில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை எந்தவித ஐயத்துக்கும் இடமின்றித் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுநாள்வரை ரஸ்ய – உக்ரைன் போர் என வர்ணித்து வந்த பன்னாட்டு ஊடகங்களும் படிப்படியாக தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ரஸ்ய – நேட்டோ போர் என அழைக்கத் தொடங்கியுள்ளன.

பல சுற்றுக்களில் உக்ரைனுக்கு ஆயுத தளபாடங்களை வாரி வழங்கியுள்ள நேட்டோ மேலும் ஒரு சுற்று ஆயுதங்களை வழங்குவதற்குத் தயாராகி வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

அதேவேளை, இதுநாள் வரை ரஸ்யாவுக்கு மானசீகமான ஆதரவை மாத்திரம் நல்கி வரும் உலகின் வல்லரசு நாடுகளுள் ஒன்றான சீனா – தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு – போர்த் தளபாடங்களை ரஸ்யாவுக்கு வழங்க உள்ளதாக வெளியாகும் செய்திகள் போர் மேலும் விரிவுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதையே உணர்த்தி நிற்கின்றன.

போர் எத்தகைய கொடுமையானது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் ஈழத் தமிழர்கள்.

இதேபோன்ற அனுபவம் உலகின் அனைத்து நாட்டு மக்களுக்கும் உள்ளது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் போரை அனுபவிக்காத மக்கள் இல்லை எனும் அளவுக்கு போர்கள் நடைபெற்றுள்ளன, இன்னமும் உலகின் பல மூலைகளிலும் போர்கள் நடைபெற்ற வண்ணமேயே உள்ளன.

சில இடங்களில் தமது சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக மக்கள் தாமாகவே போரை வலிந்து மேற்கொள்கின்றனர். வேறு சில இடங்களில் போர் மக்கள் மீது திணிக்கப்படுகின்றது. போரின் காரணம் எதுவாக இருந்தாலும் வல்லரசுகளின் மறை கரம் அந்தப் போர்களில் இல்லாமல் இல்லை என்பதே யதார்த்தம்.

‘நாடுகாண் பயணம்’ என்ற போர்வையில் உலகின் பல நாடுகளையும் தமது ஆளுகைக்குள் கொண்டுவந்த முன்னாள் காலனித்துவ நாடுகள், தமது ஆளுகைக்குள் இருந்த நாடுகள் சுதந்திரம் கோரிப் போராடிய வேளைகளில் அத்தகைய நியாயமான போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கியதே வரலாறு.

உலகின் முதலாவது பொதுவுடமை நாடு என்ற பெருமை பெற்ற சோவியத் ஒன்றியமும் பின்னாளில் மாவோ சேதுங் தலைமையிலான மக்கள் சீனமும் வழங்கிய ஆதரவு காரணமாகவே இன்று உலகின் பல நாடுகள் சுதந்திர நாடுகளாக உள்ளன என்பதே உண்மை.

ஆனால், தமது காலனித்துவ முனைப்புகளைக் இன்னமும் கைவிட்டு விடாத முன்னாள் காலனித்துவ எசமானர்கள் – வெவ்வேறு சொல்லாடல்களுள் தம்மை மறைத்துக்கொண்டு – இன்னமும் ஏனைய நாடுகளை எவ்வகையிலாவது தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது, அந்த நாடுகளின் வளங்களை முடிந்தளவு சுரண்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் மோதல்களை உருவாக்கி அவற்றை ஊதிப் பெருப்பிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்புக் காலத்தில், மேலே விபரிக்கப்பட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும் போராக உக்ரைன் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ரஸ்யா என்ற அணுவாயுத வல்லரசு நாட்டோடு போராடும் வல்லமை அறவே இல்லாத நிலையிலும், மேற்குலகின் உதவியோடு ரஸ்யாவைத் தோற்கடிக்க முடியும் என்ற போலியான நம்பிக்கையூட்டலில் உக்ரைன் படையினர் போரில் பங்குகொண்டு வருகின்றனர். பாரிய இழப்புகளைச் சந்தித்த பின்னரும், பெருமளவு நிலப்பரப்புக்களை இழந்த பின்னரும் அவர்கள் போரிட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இது வெளிப்படையான விடயம்.

இந்தக் கருத்தையே சீனாவின் வெளியுறவு அமைச்சர் கின் காங், தலைநகர் பீக்கிங்கில் நடாத்திய வருடாந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.

“ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே மார்க்கம் போரை நிறுத்தி சமாதானப் பேச்சுக்களை நடத்துவதே. விரைவாக இந்த முயற்சி நிகழ்ந்தாக வேண்டும். ஐரோப்பாக் கண்டத்தில் அமைதியும் சமாதானமும் நிலைக்க வேண்டுமானால் அனைத்துத் தரப்பினரதும் நியாயமான பாதுகாப்புக் கரிசனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.” எனத் தெரிவித்த அவர், “கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அத்தகைய முயற்சிகள் வெற்றிபெறுவதை ‘மறை கரம்’ ஒன்று தடுத்து வருகிறது” என்றார்.

அவர் குறிப்பிடும் மறை கரம் யாது என்பதை உலகம் முழுவதும் அறியும். அந்த மறை கரமே இன்று உலகின் பல இடங்களிலும் நடைபெறும் ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் தடையாக உள்ளது.

அது பாலஸ்தீனமாக இருந்தாலும், யேமனாக இருந்தாலும், சிரியாவாக இருந்தாலும், உக்ரைனாக இருந்தாலும் அந்த மறை கரம் விரும்புவது போர் நீடிப்பதையே.

அந்த மறை கரம், தற்போது உக்ரைன் நாட்டில் மாத்திரம் மட்டுப்பட்டு நடைபெற்றுவரும் போரை ரஸ்ய மண்ணுக்கும் விரிவுபடுத்த விரும்புகிறது. அதேபோன்று, உக்ரைனைச் சூழவுள்ள நாடுகளையும் போர்ச் சுழலுக்குள் இழுத்துவிடப் பகீரதப் பிரயத்தனம் செய்கிறது.

உலக நாடுகள் அனைத்திலும் ரஸ்யாவுக்கு எதிராக ஓடியோடிப் பரப்புரை செய்து வரும் அமெரிக்கா, தனது முகவர் அமைப்பாகச் செயற்பட்டுவரும் நடப்பு ஐ.நா. சபையிலும் ரஸ்யாவுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.

உலகின் காவல்காரனாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் அமெரிக்கா, தான் நினைத்தவாறே உலகம் இயங்க வேண்டும் எனக் கட்டளையிடுகிறது. அதனைக் கேட்டு நடக்காத நாடுகளை எப்படியாவது வழிக்குக்(?) கொண்டுவர தன்னிடம் உள்ள அதிகார மற்றும் பண பலத்தைப் பயன்படுத்துகின்றது.

அமெரிக்க மேலாண்மையை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுள் ஒன்றான சீனா, உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன் சமாதான முன்மொழிவு ஒன்றைச் செய்துள்ளது.

அதனை உக்ரைனும், அதன் எசமானர்களும் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் சீனா எத்தகைய முடிவை எடுக்கும் என்பதே தற்போது உலக அரங்கில் விவாதிக்கப்பட்டுவரும் விடயமாக உள்ளது.

தற்போதைய சூழலில் போர் தணிவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இரண்டு தரப்பிலும் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கிறது.

போரினால் ஏற்படும் பொருண்மிய இழப்பு பற்றி விவரிக்கவே முடியாது. உலகில் இதுவரை நடைபெற்ற போர்கள் யாவும் – வெற்றி, தோல்வி என்பதற்கு அப்பால் – பேச்சுவார்த்தை மேசையிலேயே முடிவுக்கு வந்திருக்கின்றன.

அந்த வரிசையில், உக்ரைன் போரும் விதிவிலக்கானதல்ல. பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்வதே போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்துடன் என்றால் போர் முடிவடைய ஏது வாய்ப்பு? உக்ரைனின் கடந்தகால வரலாறு உணர்த்தும் செய்தி இதுவே.

Leave A Reply

Your email address will not be published.