கொரோனாத் தொற்று உறுதியான 2 பேர் சாவு – ஒருவரது மரணமே கணக்கில் சேர்ப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவரது மரணத்தையே கொரோனா மரணமாக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு – 13 ஐச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவர் நேற்று தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின்போது அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்டகால நோயினால் பீடிக்கப்பட்டிருந்த குறித்த பெண் சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக வீட்டிலேயே இருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

அவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரது மரணம் இலங்கையில் 24 ஆவது கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணமாகப் பதிவாகியுள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு 13 ஐச் சேர்ந்த 78 வயதுடைய நபர் ஒருவர் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றுமுன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் மரணம் தொடர்பில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த நபரின் மரணம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்படாத காரணத்தால் அதனைக் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணமாகக் கருத முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.