மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் : காலமும் படைப்புலகமும் : 01 – T.சௌந்தர்

மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் : காலமும் படைப்புலகமும்

– T.சௌந்தர் 

நினைவில் விழும் அருவி :

msv`1காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும் பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார்.

பாடலின் வரியையும் அதன் மெட்டையும் அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார். மகனோ தன் போக்கில் பாடலை முழுமையாகப் பாடி முடித்தான்.தனது பேரபிமானத்திற்குரிய மகாகவி பாரதியின் பாடலை மகன் பாடியதால் தந்தையார் பேருவகையடைந்தார்.தனது அண்ணனைப் போல ஒரு இசைக்கலைஞனாக வருவான் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

” சிந்துநதியின்மிசை நிலவினிலே ” என்ற அந்த.பாரதிபாடலைப் பாடிய அந்த குழந்தை வேறுயாருமல்ல, இந்தக்கட்டுரையாளர் தான்! இந்தப்பாடலின் வரிகளை இன்று கேட்டாலும் சொல்ல முடியும் என்று சொல்லுமளவுக்கு மனதில் பதிந்துவிட்ட பாடல் அது.

இந்த சம்பவம் சாதாரணமானது என்றாலும் தமிழ் சினிமாஇசையின் மெல்லிசை மலர்ந்து கொண்டிருந்த காலமொன்றைச் சேர்ந்த இனிய பாடல் என்பதை நினைவுறுத்தும் பொருட்டு சொல்கிறேன்.மூன்று வயது பையன் ஒருவன் பாடலின் பொருள் தெரிந்தா பாடியிருப்பான்? பாடலின் இசைதான்அதை சாத்தியமாக்கியிருக்கும் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இங்கில்லை!

நமது வாழ்க்கையோட்டத்தில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியினரின் பாடல்கள் விதையாகி ,செழித்து வளர்ந்தது இவ்விதமே.

கடந்து போன காலங்களை நினைக்கையில் இதயத்துடன் பிணைந்த பாடல்களின் வாசம் நம் நெஞ்சங்களை நிறைக்கும். பிஞ்சுமனங்களில் வேரூன்றி, பற்றிப்படர்ந்து , நெஞ்சின் அடியாழத்தின் உள்ளுறைகளில் புதைந்த பாடல்களை நம்மால் இலகுவாக மறக்கமுடிவதில்லை.

Music and Rythm find their way in to the secret places of the Soul – என்பார் பிளேட்டோ.

கடந்து கால நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கு இசை ஒரு இலகுவான சாதனம். பழையபாடல்களைக் கேட்கும் போது எந்தெந்தப்பாடல்களைக் எங்கெல்லாம் கேட்டோம், எந்தச் சூழ்நிலையில் அவற்றைக்கேட்டோம் என்பதெல்லாம் விரல் சொடுக்கில் வந்து விழுந்துவிடுகின்றன. வாழ்வின் மகிழ்ச்சிகரமான சம்பவங்களிலும் , துக்ககரமான சம்பவங்களிலும் இசை கலந்தே இருக்கிறது.!

நினைவுகளின் ஓடையாக இசை விளங்குகிறது.இசையுடன் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.ஒவ்வொரு பாடலும் நம்முடன் உரையாடல்களை நிகழ்த்தியே வந்துள்ளது.இசையின் முருகு இளம்வயது பருவத்தில் நம்மை ஆட்கொள்கிறது.இனிய வாத்திய இசையுடன் அதை பருகும் போது மனம் எழிலடைகிறது.உணர்ச்சி நிறைந்த இசை உள்ளத்தில் சிறு பொறியைத் தோற்றுவித்து நுண்ணறிவில் சுவாலையை ஏற்படுத்துகிறது இதனால் எழும் அறிவார்வத்திற்கு உயிர் கொடுக்கிறது.

வானலைகளில் நீந்தி ,காற்றுவெளியில் மிதக்கும் இசையலைகள் மனிதனின் காதுகளில் புகுந்து அவனோடு ரகசியம் பேசவும் , பலவித கற்பனைகளையும் ,உணர்வுகளையும் கிளர்த்துகின்றன.

காரண காரியங்கள் தெரியாமல் , காலகாலமாய் நாம் இசையைக் கேட்டு ரசித்து மகிழ்ந்திருக்கின்றோம்.பிறந்து வளர்ந்த காலம் தொட்டு இசையில் லயித்து வந்த நாம் எங்களுக்குப் பழக்கமான பாடல்களைக் கொண்டாடியும் வந்திருக்கின்றோம்.இன்பம் தரும் பல இசைவகைகளின் சுமைதாங்கியாகவும் நாம் இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் வாழ்வில் இரண்டறக்கலந்த பாடல்கள் என்றால் அது திரையிசைப்பாடல்களே ! ஒலிப்பதிவு செய்யப்பட்ட இப்பாடல்கள் மீண்டும், மீண்டும் கேட்க வழிவகுத்தன.

வாழையடி வாழையாய் வந்த ராகங்களில் அமைந்த பலவிதமான பாடல் வகைகள் ,அவற்றில் மெல்லியதாய் நுழைந்து , நமக்கு அறிமுகமில்லாத இசைவகைகளையும் ,வாத்தியங்களையும் இசையமைப்பாளர்கள் கலாபூர்வமாக இணைத்து தந்த பாடல்களால் நம் உணர்வுகள் கிளரப்பட்டிருக்கின்றன.

இவ்விதம் தமிழ் திரையிசைக்கு ஜீவசத்துமிக்க பாடல்களைத்தந்த முன்னோடிகளில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்!

மரபு வழியின் தடம்பற்றி திரையிசையின் மெல்லிசையில் பரவசமும் , புதுமையும் ,உணர்ச்சி வெளிப்பாட்டில் மிகச் சிறந்த பாடல்களையும் தந்து மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

பழமைக்கும் புதுமைக்கும் நிகழ்ந்த போராட்டத்தில் புதுமையின் கை ஒங்க வைத்த பெருமை இவர்களையே சேரும். படத்திற்குப் படம் இனிமையான பாடல்களைப் பொழிந்தார்கள்.

அவர்கள் தந்த பாடல்களில் தான் எத்தனை உணர்வுகள் , எத்தனை பாவங்கள்..!

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே- வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே….

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே

இந்தப்பாடல் வரிகளை வாசிக்கும் போதே எத்தனை பரவசம் ஏற்படுகிறது.பாடலின் ஒலிநயம் உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்த அதனுடன் இணைந்த இசையோ நம்மை நெகிழ வைக்கிறது.

அழகுணர்ச்சியையும் ,மன எழுச்சியையும் தூண்ட நுட்பமும் ,செறிவும் ஒன்றிணைந்து கலாப்பூர்வமாக வெளிப்படும் கவிதை அதை இனிதே எடுத்துச் செல்லும் தன்னிகரில்லாத இசை.இனிமையான குரல்களில் வரும் இனிமையும் , சோகமும் கலந்த அற்புதமான தாலாட்டு.

தங்களது குடும்பநிலை , உறவுகளின் பெருமை,மற்றும் பலவிதமான நிலை என தாலாட்டு மரபின் அத்தனை அம்சங்களையும் உயர்வளித்து சொன்ன பாடல் அது!

இது போன்று கதையின் சூழலை கவிதையின் உயர்வான நடையில் பல பாடல்களில் கேட்டிருக்கின்றோம்.

வானாடும் நிலவோடு கொஞ்சும்
விண்மீன்கள் உனைக்கண்டு அஞ்சும் – எழில்
வளமூட்டும் வினை மின்னல்
உனைக்கண்டு அஞ்சும்

என்று கவிஞர் வில்லிபுத்தன் எழுதிய ” மாலாஒரு மங்கல் விளக்கு ” பாடலை நாம் உதாரணமாக இங்கே தந்தாலும் ,அந்தப்பாடல் மிக அருமையான மெட்டமைப்பைக் கொண்ட பாடல் தானெனினும் , “மலர்ந்தும் மலராத” பாடல் அளவுக்கு வெகுமக்களிடம் சென்று வெற்றியடையவில்லை என்பதே உண்மை.மிகப்பெரிய வெற்றிப்படமான பாசமலர் படத்தின் வெற்றியும் இந்தப்பாடல் அதிக புகழ்பெற்றமைக்கான காரணமாகும்.

எனினும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்த இனிய மெட்டல்லவா அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது ! இது போன்ற பல இசைவார்ப்புகள் நம்மைக் கொள்ளை கொண்டு சென்றன.நெஞ்சை ஆட்சி செய்யும் வளமிக்க பாடல்கள் அவை !

Viswanathanஇனிய இசையின் வெற்றி என்பதே இது தான்! அந்த இனிய இசைக்கு என்ன வரிகளை வைத்தாலும் இசை வென்று விடும் என்பதே உண்மை.ஆனால் உயிர்த்துடிப்புமிக்க வரிகள் இணையும் போது நெஞ்சைப் பறி கொடுக்கும் ரசவாதம் பிறந்து விடுகிறது.

தமது அமரத்துவக் கானங்களால் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் அழகுலகைக் காட்டியதில் பெரும் பங்கு தமிழ் திரையிசையமைப்பாளர்களுக்கு உண்டு.அதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லதகுந்த தனித்தன்மைமிக்கவர்கள் தான் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எத்தனை வகை , வகையான, எண்ணற்ற இனிய பாடல்களால் தமிழ் இசை ரசிகர்களை இன்பத்தில் திணறடிக்க வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.

பின்னாளில் எத்தனையோ புகழாரங்களை மெல்லிசைமன்னர்கள் பெற்றாலும் , அதில் அதியுயர் பாராட்டாக, அதே துறையில் யாரும் எட்டாத சிகரங்களைத் தொட்ட இசைஞானி இளையராஜா ,மெல்லிசைமன்னர்களின் இசை எவ்விதம் தன்னை பாதித்தது என்பதை விளக்க முனைந்தமை சிறந்த பாராட்டாக அமைந்தது

” நான் ஒரு இசைக்கலைஞனாக இந்த உலகத்தில் நடமாடிக்கொண்டிருப்பதன் முக்கியமான காரணம் அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் , மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி அவர்களுமே ! ஏனென்றால் நான் பிறந்த கிராமத்திலே இசை கற்றுக் கொள்ள விரும்பினாலும் அங்கே சொல்லிக் கொடுக்க யாருமில்லை.அந்தக் கிராமத்திலே அவர்களுடைய பாடல்கள் ஒலிக்காத நாளெல்லாம் விடியாத நாள் என்று தான் எங்கள் பொழுதுகள் கழிந்தன……உணர்வுமயமான அவர்களது நாதம் என்னுடைய நாடி , நரம்பில், இரத்தத்தில் உடம்பில் எல்லாம் ஊறிப்போனதால் தான் !

இது தான் மெல்லிசைமன்னர்கள் பெற்ற அதியுயர் பாராட்டு என்பேன்.அவர்களின் இசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பது அவர்களது இசை, ஒரு மாபெரும் கலைஞனை உருவாக்குவதில் எவ்விதம் பங்காற்றியிருக்கிறது என்பதே!

பழைய பாடல்கள் என்றதுமே கருப்பு வெள்ளைப் படங்களும் , வானொலிப்பெட்டியும் நம் நினைவுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாகும்.வானொலி நம்மை தன்னுடன் இறுக அணைத்துக் கொண்ட சாதனமாகும்.இதயத்தோடு இணைந்த எத்தனையோ பாடல்களைத் தந்து உணர்வு மிகுதியில் நம்மைத் திளைக்க வைத்ததிருக்கிறது.இசையில்நம்மை தாலாட்டி வளர்த்த தாய்வீடு வானொலியே என்று சொல்லி கொள்வதற்குக் காரணமாயிருந்தவர்களில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

விருது பெறுவதால் மட்டும் ஒருவரின் திறமை அளவிடப்படும் இன்றைய விசித்திர சூழ்நிலையில் ,தனது திறமைக்கு கிடைக்க வேண்டிய குறிப்பிடத் தகுந்த விருதுகளும் பெறாமல் மறைந்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அவர் இசையமைத்த பாடல்கள் சில தேசிய அளவில் விருதுகள் பெற்றாலும் அவருக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் விருதுகளுக்கு அப்பால் நல்லிசை ரகிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டிருப்பவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் !

தனது படைப்புக்கள் பேசப்பட வேண்டும் என்றோ , விருகள் பெற வேண்டுமென்றோ முனைப்புக்காட்டாத அவர்,மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற சினிமா இசை மூலம் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்துப்பார்க்க முடியாத காலத்து மனிதராக வாழ்ந்து மறைந்தார். ஆயினும் அந்த ஆதங்கம் அவரிடம் வெளிப்பட்டுமிருக்கிறது.”உழைக்கத் தெரிந்தது ,பிழைக்கத் தெரியவில்லை” என்பார்!

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் இசைப்பாரம்பரியமற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் புதியதொரு பரிமாணத்தை நிகழ்த்திய மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன்.

தமிழின் சகோதர மொழியான மலயாளம் தந்த ஈடு இணையற்ற இசையமைப்பாளனை தமிழ்த்திரையுலகம் தத்தெடுத்துக் கொண்டது.

அதற்கு கைமாறாக அவர் தந்த இசை,தமிழ்ப்பாடல்களை பிற மொழியினர் வியந்து பார்க்க வைத்தன.1940 களிலேயே கொடிகட்டி பறந்த ஹிந்தியின் மெல்லிசை , அதன் ஈர்ப்பால் 1950 களில் வீசிய தெலுங்கு மெல்லிசை அலை போல 1960 களில் தமிழில் வீசியடித்த மெல்லிசை வீச்சின் சொந்தக்காரர் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.

1952 இலிருந்து 1965 வரை ஒன்றிணைந்து இயங்கிய அவர்கள் மனது மறக்காத பல பாடல்களைத் தமிழ்மக்களுக்கு விட்டுச் சென்றார்கள்.அழகியல் நோக்கில் பல இனிமையான பாடல்களைத் தந்தவர்களின் பிரிவு பற்றிய துல்லியமான காரணிகள் யாராலும் பேசப்படவில்லை.அவர்களும் அது குறித்து பேசியதில்லை.இசை வேட்கை மிகுந்த இரு மேதைகளின் பிரிவு தமிழ் திரை இசைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்பதை விட நல்லிசை ரசிகர்களுக்கு பேரிழப்பு என்பதே பொருத்தமானதாகும்.

மெல்லிசைக்கு புதுக்கட்டியங் கூறிய இரட்டையர்களின் கூட்டு குறிப்பாக இறுதி 5 ஆண்டுகளில் [1960 – 1965 ] உச்சம் பெற்றது.ஒளிவீசிக் கொண்டிருந்த நட்சத்திரம் உதிரும் போது ஒளியைப் பாய்ச்சி மறைவது போல , நல்ல பல பாடல்களை அள்ளிக் கொட்டியவர்கள் பிரிந்து சென்றனர்.

நம் வாழ்வின் நீண்ட பாதையில் அவர்களது பாடல்களுடன் நாம் பயணித்திருக்கின்றோம்.
வானொலியில் பிறந்து காற்றலைகளில் மிதந்த அவர்களது பாடல்கள் நம் நெஞ்சங்களில் கலந்து நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.

ஆரம்பநாளில் மெல்லிசைமன்னர் இசையமைத்த “வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே ” , “கூவாமல் கூவும் கோகிலம் ” , “தென்றலடிக்குது என்னை மயக்குது , “கண்ணில் தோன்றும் காடசி யாவும்” ,”கசக்குமா இல்லை ருசிக்குமா” போன்ற பாடல்களை நினைக்கும் போதே மனம் ஒருவித போதையில் ஆழ்கிறது.நினைவு திரையில் மறைந்த உறவுகளும் , நினைவுகளும் , கழிந்து போன நாட்களும் நம்மை வருத்தம் தந்து வருடிச் செல்லும்.மெல்லிசையில் ஒரு துலக்கத்தை அந்தக் காலத்திலேயே காண்பித்திருப்பதையும் அவரது திறமமையையும் எண்ணி வியக்கவும் வைக்கிறது .

மெல்லிசைமன்னர்கள் திரைப்படத்தில் நுழைந்து முன்னுக்கு வந்த காலத்தைக் கவனத்தில் எடுத்தல் தேவையாகிறது. கர்னாடக செவ்வியலிசையின் கட்டுக்கள் தளர்ந்து மெல்லிசையின் துளிர்கள் அரும்பிக்கொண்டிருந்த காலம் என்பதை திரையிசையை நோக்குபவர்கள் உணர்வார்கள்.மெல்லிசைக்கான முகிழ்ப்புக்கு , நாடக மரபில் வந்த மூத்த இசையமைப்பாளர்களைப்போல மரபையொட்டிய மெல்லிசையையும் ஹிந்தி திரை இசையையும் ஆதர்சமாகக் கொண்டு பாடல்களைக் கொடுக்க முனைந்தனர்.

1952 ஆம் வருடம் பணம் படத்தின் மூலம் ஒன்றிணைந்த மெல்லிசைமன்னர்களுக்கு
முன்னிருந்த சவால் என்பது , அவர்களுக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்களையும் , அவர்களது சமகால இசையமைப்பாளர்களையும் தாண்டிப் புதுமை செய்வதென்பதே!

[தொடரும்]

நன்றி : இனியொரு

Leave A Reply

Your email address will not be published.