கல்முனை சம்மாந்துறை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்க பரிந்துரை.

கல்முனை சம்மாந்துறை கல்வி வலயத்தில் தரம் 10 ,11 ,12, 13 மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்க பரிந்துரை

சம்மாந்துறை பகுதியில் 5 கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கிழக்கில் இதுவரையில் 2500 அன்டீஜன் பரிசோதனை மற்றும் 7000 பிசீஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

கொவிட் 19 தொடர்பான இன்று(6) விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம் பெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

கொரோனா என்பது ஆபத்தான நோயாகும்.அத்துடன் பொதுமக்களின் பொருளாதாரமும் இதை விட முக்கியமானது.கொரோனா என்ற கட்டுப்பாட்டுக்காக எமது பொருளாதாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது.இதனால் தான் அக்கரைப்பற்று பிராந்திய விவசாயிகளின் நலன் கருதி அவர்கள் விவசாயத்தில் ஈடுபடும் வகையில் சுழற்சி முறை தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நாளை (7) திங்கட்கிழமையில் இருந்து கட்டம் கட்டமாக இந்த நடவடிக்கை இடம்பெறும்.இதை விட எழுந்தமானமான பி.சி.ஆர் பரிசோதனைகளை கிராம சேவகர் பிரிவுகளாக பிரித்து அட்டாளைச்சேனை ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று திருக்கோவில் பகுதிகளில் மேற்கொள்வதற்கு உத்தரவு இட்டுள்ளேன்.தொடர்ந்து மேற்படி பகுதிகளில் தொற்று நீக்கம் குறைவடையும் பட்சத்தில் கட்டம் கட்டமாக தனிமைப்படுத்தல் சட்டத்திற்குட்பட்ட பிரதேசங்கள் விடுவிக்கப்படும்.கடந்த காலங்களில் ஆளுநரினால் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து பாடசாலைகள் மூட உத்தரவிடப்பட்டிருந்தது.

குறித்த பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நாங்கள் இன்று கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளருடன் இணைந்து முடிவுகளை எடுத்துள்ளோம்.இம்முடிவில் கல்முனை சம்மாந்துறை கல்வி வலயத்தில் தரம் 10 11 12 13 மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்க பரிந்துரையை வழங்கி உள்ளோம்.இந்த பரிந்துரைக்கமைய முடிவு கிழக்கு மாகாண ஆளுநரால் எடுக்கப்படும்.மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் கடமையாற்றிய களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் இயங்க அறிவுறுத்தலை வழங்கி உள்ளோம்.சம்மாந்துறை பகுதியில் 5 கோரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.அக்கரைப்பற்று பிராந்தியத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள இச்சந்தர்ப்பத்தில் தேவையற்ற முறையில் பொதுமக்கள் நடமாட முடியாது.இங்கு வாழும் மக்களின் கைகளின் தான் தனிமைப்படுத்தல் சட்டம் நீடிப்பது தங்கி உள்ளது.

தற்போது இப்பிரதேசத்தில் சுகாதார பிரிவினரினால் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை மற்றும் ஏனைய பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையிலே கட்டம் கட்டமாக தனிமைப்படுத்தல் சட்டம் தளர்த்தப்படும்.கிழக்கில் 2500அன்டீஜன் பரிசோதனைகளை இதுவரையில் மேற்கொண்டுள்ளோம்.7000 பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.