பெண்கள் நினைக்காத சிகரங்களை தொடும் முனைவர். தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி – ஜோ

பேட்டி : பாகம் 2 

பெண்கள் அதிக அளவில் தடம் பதிக்காத கடற்சார் சூழலியல் துறையில் இந்திய தரச் சபையின் ஒப்புதல் பெற்ற சூழலியல் மற்றும் பல்லுயிர் நிபுணர், கவிதைத் தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டவர், குஜராத்தில் அன்றைய முதல்வர் மோடியுடன் பணியாற்றியவர், தமிழ்நாட்டின் ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு முனைவர் பட்ட ஆய்வுகளைத் திறனாய்வு செய்து சிபாரிசு அறிக்கை அளிக்கும் புற மாநில ஆய்வாளர் . இப்போது ஆசிய வளர்ச்சி வங்கியின் கடலோரப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கடற்சார் சூழலியல் நிபுணராகப் பணியாற்றி வருகிறார் இவர். கர்நாடகக் கடலோரத்தில் மணல்மேடுகள் பாதுகாப்பு மற்றும் மீள் உருவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லியிடம்  மிறர் பத்திரிக்கைகாக  உரையாடினோம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

10. உங்கள் சாதனைகள் பெருமையாகவும் மலைப்பாகவும் உள்ளது. உங்கள்
சாதனையின் ரகசியம் என்ன?


முதலில் தேவகிருபை, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மூத்தோரின் ஆசீர்; அடுத்து  எனக்கு பிடித்த காரியங்களை, படிப்பை, தொழிலை தேர்ந்தெடுக்கும் படி அமைத்துக் கொண்ட சூழல், முயற்சிகள், போராட்டங்கள், இழப்புகள் என தொடர்ந்து நான் மேற்கொள்ளும் எந்த வேலையிலும் காட்டும் ஈடுபாடும், விடாமுயற்ச்சியும் ,  நான் என்ற சுயமரியாதை மற்றும் அகங்கார மனபான்மையும் தான் ரகசியம்.

11. உங்கள் அம்மாவைப் பற்றி பகிருங்களேன்.

என் அம்மா மிகவும் வித்தியாசமானவர். ரொம்ப கண்டிப்பானவர் அதே அளவு அன்பானவர், தைரியசாலி. பள்ளி காலங்களில் நான் ரொம்ப அக்கிரமம் அடி தடி என்று இருப்பேன். எனவே யாராவது பெற்றோர் என்னை பற்றி புகார் கூறினால் உடனடி அவர்கள் முன்னாலேயே என்னை தண்டிப்பார்.

நான் தவறு செய்து அடி வாங்கினால் மாலை நேரம் அமர செய்து எதற்காக தண்டனை கொடுத்தார்கள் என்பதை விளக்கி, நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று வேதத்தை ஒப்பிட்டு அறிவுரை சொல்வார்கள்.

வளர்ந்த பின்னர் யார் என்னை பற்றி கூறினாலும் என் மகளை பற்றி எனக்கு தெரியும், நன்றி என்று சொல்லிவிடுவார். யார் என்னை பற்றி போட்டு கொடுத்தாலும் வேலைக்காகாது.

என் அம்மா கணக்கில் புலி, செஸ் விளையாட்டில் அம்மாவை யாரும் வெல்ல முடியாது அவ்வளவு கெட்டிகாரி. தமிழ் பண்டிட் படித்து இருந்தாலும் பணி செய்தது கணக்கு
மேலாளராக.

எனவே எனக்கு வீட்டில் தமிழ் ஆசிரியை அம்மா தான், ஈஸி செயாரில் அமர்ந்து கொண்டு தலையில் என்னை கொட்டி கொட்டி தமிழ் சொல்லி தருவார்.  அம்மா பணி ஓய்வு பெற்று அவர்கள் என்னுடன் இருந்த காலம் வரை எனது வரவு செலவு  அனைத்தையும் அம்மா தான் கவனித்தார். ரொம்ப கடவுள் பக்தி நிறைந்தவர்,

காலை 3.30  மணிக்கு மேல் அவர் உறங்க மாட்டார், காலை முதல் பாடல், ஜெபம், வேத ஆராய்ச்சி,
தோட்டம் என தனது முழு நேரத்தையும் செலவு செய்வார்.

தனியாக பல நாடுகளுக்கு ஒவ்வொரு வருடமும் சுற்றுலா சென்று வருவார். நான் வெளிநாடுகளில் பணி நிமித்தம் சென்றால் , அம்மாவும் வந்து விடுவார். நான் பார்க்காத
நாடுகளை எல்லாம் என் அம்மா சுற்றி வந்துள்ளார். என் தங்கை தம்பியை விடவும் எனக்கு மிகவும் செல்லம் கொடுப்பார்.  வெளிப்படையாக பாரபட்சமும் காட்டுவார். நானும் அம்மாவும் தோழிகள் போல அவரது கடைசி காலங்களில் (டிசம்பர் 16, 2014 வரை) இருந்தோம். ரொம்ப அம்மாவை மிஸ் செய்கிறேன்.

12. உங்கள் அம்மாவிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த குணம் என்ன?

சுதந்திரமாக நான் வலம் வர, என் வாழ்க்கையை நான் முடிவெடுக்க கற்று தந்து,  எனக்கு தடையாக இல்லாதிருந்தது பிடிக்கும். அம்மா என்னை ரொம்ப கொஞ்சுவாங்க. கடைசி வரை என்னை நர்சரி பாடசாலை குழந்தை போல தான் கவனிப்பார். நான் வளர்ந்து விட்டதாக அவர் நினைப்பதே கிடையாது.

 நான்  பொம்மை போல வீட்டில். தினம் எனக்கு வித விதமாக பசியாரை செய்து தர வேண்டும் என்பது அவர்களுக்கு பிடித்த விஷயம். நாங்கள் இருவரும்
எப்போதும் சேர்ந்து தான் சாப்பிடுவோம், எனக்காக எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருப்பார்கள். சேர்ந்து சாப்பிட.. என்னை  பாரபட்சமின்றி நேசித்து குடும்பத்தின் எந்த முடிவையும் நான் எடுக்க வேண்டிய முழு அதிகாரத்தையும் என்னிடம் தந்து இருந்தது எனக்கு பிடிக்கும். அம்மாவின் வேத ஞானம் எனக்கு பிடிக்கும்.

 

13. பெண் விடுதலையை பற்றி உங்கள் கருத்து என்ன?


அவளுக்கு பிடித்ததை, பிடித்த நேரத்தில், பிடித்தது போல யார் தலையீடும் இன்றி செய்ய கூடிய சூழல் இருப்பது விடுதலை. கற்புள்ள பெண், மனைவி, தெய்வீக தாய், தியாகம் செய்யும் தேவதை போன்ற மட்டுப்படுத்தும் தேவையற்ற பிம்பங்களை தவிர்த்து அவள் அவளாகவே இருக்க நேர்வது விடுதலை.

இதை யாரும் யாருக்காகவும் செய்து விட முடியாது; அவளாக தான் உடைத்து எறிந்து அவளாக வாழ்ந்து கொள்ள வேண்டும். அதற்கான சூழலை அவள்தான் உருவெற்படுத்த  முடியும்.

அதற்கான விழிப்புணர்வை, கொஞ்சமாவது தற்பொழுது உடைத்து கொண்டு விடுதலையாக இருப்பதாக உணரும் பெண்கள் மற்றவர்களுக்கு சரியான வழியில் உதவ வேண்டும். தனது குழந்தைகளுக்கு பெண் என்பவள் ஒரு தனி நபர்,   அவள் ஒன்றும் எதையும் கட்டி காக்க வேண்டியது இல்லை,  அவளுக்கு அவளாக வாழ உரிமை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு புரிய வைக்க வேண்டும்.

இன்றைய சூழலில் பெண் விடுதலை என்பதை ஒரு கட்டத்துக்குள் கட்டி வாழ வேண்டிய விதிமுறைகளை கலாச்சாரம், ஜாதி, மதம் என்ற போர்வைக்குள் வைத்து தருகின்றன. அல்லது
குழந்தைகளை காட்டி கட்டி போடுகிறது. தனது சுதந்திரத்திற்கு பாதகமாக இல்லாதவரை
எதுவும் பொருட்டல்ல அல்லது அதை ஏற்றுக்கொண்டு அடங்கி போவதும் அவரவர் விருப்பு.

எதுவாக இருந்தாலும் பெண் விடுதலையாக, தனிமனித உரிமைகளுடன்  சுயமரியாதையுடன் வாழத் தேவையான பொருளாதார சுதந்திரம் உடையவளாக இல்லாத வரை பெண் விடுதலை எல்லாம் சும்மா போலிப் பொருள்தான். தனி நபர் சுதந்திரத்தை விளங்கிய பெண்ணிடம், தடைகளை உதாசீனப்படுத்தி, கட்டுக்காவல் இல்லாத காற்றை போல, போங்கடா டேய் என சொல்லும் மனப்பக்குவமும் அமைந்து விடும்.

ஆண்களும் பெண்களும் தனிநபர் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதற்கு காரணம் அவர்கள் தற்பொழுது பிறரை சுரண்டி அனுபவித்து கொண்டு இருக்கும் சுகபோகங்கள் தட்டி போய்விடும் என்பதால் மட்டுமே.

 

14. பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து எப்போது விடுபடுவார்கள்?


நான் ஒரு தனி நபர், எனக்கு எல்லா சுகங்களையும் அனுபவிக்க உரிமை உள்ளது, நான் காற்றை போல சுதந்திரமானவள், என்னை தடுக்க, எனக்கு பிடித்ததை செய்வதை தடுக்க இன்னொரு நபருக்கு உரிமை இல்லை, சரி, தவறு, கட்டுப்பாடு, கலாச்சாரம் இவை எதுவும் தனி நபர் உரிமைகளை கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் நாள், தனக்கான பொருளாதார சுதந்திரத்தை உண்டு பண்ணும் பொழுது பெண் விடு படுவாள்.

15. கணவன் மனைவி உரசல்கள் பெருகி வருகிறது. இதை தவிற்கும் வழி என்ன?
இதற்கான தீர்வு என்னவாக இருக்கும்?


தத்தம் உடல், மனம், ஆரோக்கியம் குறித்தோ, ஆண் உடலை பற்றி பெண்ணிற்கோ, பெண் உடலை பற்றி ஆணிற்கோ சரியான புரிதல் இல்லாமல் இருப்பதும், பல விதமான மனவேற்றுமைகளை குடும்பங்களில் கொண்டுவருகிறது. பல நேரங்களில் தங்கள் குறைகளை மறைத்து கொள்ள துணிந்து மறுபாலினத்தவரை அதிகார துஷ்பிரயோகம் செய்து குடும்ப நிம்மதியை கெடுத்து கொள்கின்றனர்.

எந்த விதமான மனம், உறவுகள், உணர்வுகள், பொருளாதாரம் சார்ந்த விடயங்களையும், எதிர்பார்ப்புகளையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் இருபாலரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு சில வழிகளில் எப்படியாவது நேராக பேசி எடுத்து சொல்லி புரிய வைக்க முற்படலாம். மூன்றாம் நபர் சமரசம் செய்ய வரவு சாபம்.

அடுத்து அடிமையாக, ஆமாம் சாமி போட்டு, சேவை செய்து, மனம் புழுங்கி சாவது,  அல்லது விவாகரத்து செய்து விட்டு வெளியே வந்து அவரவரது வழியில் சுகமோ துக்கமோ வாழ்ந்து கொள்வது தீர்வு.

 

16. தாய்மார்கள் ஆண்மகனை எப்படியாக வளர்க்க வேண்டும்?


தாய் தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற கட்டாயமே இல்லை. தகப்பனுக்கும் இதில் சரி பங்கு உண்டு. தாய் என்பவள் ஒரு தனிநபர். அவளுக்கும் சுயமான ஆசாபாசங்கள் உண்டு. அவள் ஒன்றும் தியாகம் செய்ய பிறந்தவள் அல்ல. குழந்தைகளுக்கு தேவையான காரியங்களை அவள் அளித்தாலும் அவளுடைய சுகங்கள் என்று வரும் போது அது தான் மேலோங்கி  இருக்க வேண்டும். அதை புரிய வைக்க தெரியவேண்டும்.

பெற்றோர் தனித்த ஆளுமையுள்ள, சிந்திக்க தெரிந்த, சுயமாக காரியங்களை தேர்வு
செய்யும் வலுவான நபர்களாக குழந்தைகளை வளர்க்க வேண்டும். தாய்மை என்ற மனக்கிளர்ச்சியில் அடிமையாக வளர்க்காது ஆளுமையுடன், சுயமரியாதையுடன் தான்
வாழ்ந்து அடுத்தவரையும் வாழ பழகுவிக்க வேண்டும்.

தற்போதைய இந்திய சூழலில் பெரும்சாரார் மனப்பிறழ்வு உடையவர்களாகவே  தென்படுகின்றனர். அதனால் தான் வன்புணர்வுகளும் கொலைகளும் கொள்ளைகளும்
சகஜமாக நடக்கின்றன; அனைத்து பழிகளும் பெண்ணின் உடுப்பிலும், தொடைகளுக்கு இடையிலும் திணிக்கப்படுகிறது. மொத்த சமுதாயத்திலும் அதிரடியான ஒரு மன மாற்றத்தை கொண்டு வரவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். தேச தலைவர்கள் இந்த விஷயத்தை துரிதமாக கையில் எடுக்க வேண்டும்.

17. நீஙகள் முகநூலில் தொடர்ந்து இயங்கும் பெண் மணி. முகநூல் வழியாக பெண்கள்
பல விதத்தில் சீண்டப்படுகின்றனர். பெண்கள் இதை எப்படி எதிர்கொள்வது?


முகநூல் ஒரு வரப்பிரசாதம். எந்த விஷயத்தையும் நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்து தான் நன்மையையும் தீமையும் அமையும். சீண்டுபவர்களை உதாசீனப்படுத்திவிட்டு, நமக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் செய்து கொண்டு செல்ல வேண்டும் அவ்வளவே.

சீண்டுதல் பிடித்து இருந்தால் அனுபவியுங்கள். சந்தோஷமோ, துக்கமோ, ஏமாற்றமோ உங்கள் சாய்ஸ் தவறேதும் இல்லை. முகநூல் வழி யாரும் யாரையும் திருத்தி விடவோ, மாற்றி விடவோ முடியாது, எனவே அறிவுரைகள் கூறுவது, ஜாதி மத அரசியல் கருத்து திணிப்புகள், அனாவசிய விவாதங்கள் போன்றவற்றை உதறி விட்டால் எல்லாம் நலமே.

யாரிடமும் எந்த காரணத்திற்காகவும் எமோஷனல் சார்பு நிலை, கடன் கொடுத்தல் வாங்கல் தவிர்த்தல் நலம். எதையும் உதாசீனப்படுத்துதல் ஒன்றே ஜாலியோ ஜிம்கானா முகநூல் வாழ்வுக்கு அடித்தளம் – ஜஸ்ட் இக்னோர்.

முனைவர். தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி
ஒருங்கிணைந்த காடுகள் மற்றும் 
எக்கோ பாலன்ஸ் கன்சல்டன்சி
வடோதரா 390 023, குஜராத்
Mobile: + 94 263 34634 ,  Email: oswinstanley@gmail.com

நேர்முகம் எடுத்தவர்: ஜோ

Leave A Reply

Your email address will not be published.