ஆரியமும் திராவிடமும் மோதும் தமிழ்நாட்டு மாநிலத் தேர்தல் : சண் தவராஜா

வாராந்தக் கட்டுரைகளின் உள்ளடக்கம் தொடர்பில் நண்பர்கள் ஒருசிலரோடு உரையாடுவது வழக்கம். தமிழ் நாடு மாநிலத் தேர்தல் தொடர்பாக எழுத உள்ளேன் எனக் கூறிய போது, அவர்களுட் சிலர் உலக நடப்புகள் பற்றி எழுதும் இடத்தில் ஒரு நாட்டின் மாநிலத் தேர்தல் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பினார்கள். தமிழ் நாட்டுத் தேர்தலை ஒரு மாநிலத் தேர்தல் எனக் குறுக்கிவிட முடியுமா? அதற்கும் அப்பால் அந்தத் தேர்தலில் வேறு முக்கியத்துவம் எதுவும் உள்ளதா? அந்தத் தேர்தல் முடிவுகள் தமிழ் நாட்டைக் கடந்து, இந்திய உப கண்டத்தையும் கடந்து உலக அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதா? என்ற கேள்விகளுக்கான விடைகளே இந்தக் கட்டுரை.

உலக நாடுகளுள் மக்கட் தொகை வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு இந்தியா. இந்த நாட்டின் தென்கோடி மாநிலமான தமிழ் நாட்டின் மக்கட் தொகை 67.86 மில்லியன். உலக நாடுகளின் மக்கட் தொகை வரிசையோடு ஒப்பிட்டால் இது பிரித்தானியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் பிரித்தானியாவின் இடம் 21. இதன்படி பார்த்தால் தமிழ் நாடு உலக மக்கள் தொகை வரிசையில் 22 ஆவது இடத்தில் உள்ள அதேவேளை, தமிழ் நாட்டை விடக் குறைவான மக்கள் தொகை கொண்ட 214 நாடுகள், பிராந்தியங்களை விட முன்னிலையில் உள்ளது.

தமிழ் நாட்டு மாநிலத் தேர்தலைப் பொறுத்த வரையில் பலமுனைப் போட்டி நடப்பது போலத் தென்பட்டாலும் அது யதார்த்தத்தில் இரு முனைத் தேர்தலாகவே உள்ளது. களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்பவை பலம் மிக்கவையாக விளங்குகின்றன.

அத்தோடு டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கூட்டணி, நடிகர் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியோடு வேறு சில உதிரிக் கட்சிகளும் களத்தில் உள்ளன.
1967 ஆம் ஆண்டின் பின்னான தமிழ் நாட்டு அரசியல் என்பது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு இடையிலான ஒன்றாகவே இருந்துவரும் நிலையில் தற்போதைய தேர்தலில் ஒரு புதிய பரிமாணம் உள்ளதாக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தி.மு.க. தரப்பில் மிகப் பாரிய ஆளுமையாக விளங்கிய கலைஞர் கருணாநிதி உயிருடன் இல்லை. மறுபுறம் ஊழல் வழக்கில் சிறைசென்றவராக இருந்தாலும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவியாக விளங்கிய செல்வி ஜெயலலிதாவும் இல்லை. இந்த நிலையில் இரண்டு மிகப் பெரிய கட்சிகளிலும் முக்கிய ஆளுமைகள் இல்லாத தேர்தலாக தற்போதைய தேர்தல் உள்ளது.

மறுபுறம், உள்ளூர் அரசியல் கொள்கைகளின் மோதலாகத் தொடர்ந்து வந்த மாநிலத் தேர்தல் அரசியல் இம்முறை மத்திய அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றாக மாறியிருப்பது தெரிகின்றது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுள் தி.மு.க. தவிர்ந்த கட்சிகளுள் ஒரு பொது ஒற்றுமை உள்ளது. அவை அனைத்தினதும் ஒரே நோக்கம் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதைத் தடுப்பது. தி.மு.க.வின் ஒரே நோக்கம் மத்தியில் ஆளும் பாரதீய ஜனநாயகக் கட்சி தமிழ் நாட்டில் வேரூன்றுவதைத் தடுப்பது.

தற்போதைய ஆளுங் கட்சியான அ.தி.மு.க. வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தி.மு.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முனைவதில் உள்ள நோக்கம் வெளிப்படையானது. தமது ஆட்சியை இழக்க விரும்பாத அ.தி.மு.க. அதனைத் தக்க வைப்பதற்காகப் போராடியே ஆக வேண்டும். ஆனால், ஆட்சியைப் பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லாத அ.ம.மு.க. மற்றும் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க.வின் வெற்றியைத் தடுப்பதிலேயே குறியாக உள்ளன என்பதில் உள்ள நுண்ணரசியலைப் புரிந்து கொள்வது அவசியமானது.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு அரசியல் கட்சி தி.மு.க. அந்தக் கட்சியை பிராமணர் அல்லாதோர் இயக்கம், நீதிக் கட்சி, தந்தை பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் என்பவற்றின் நீட்சியாகவே பார்க்க முடியும். சமூக நீதி, சுய மரியாதை, பெண்ணுரிமை, பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் மொழி வளர்ச்சி போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அக் கட்சி இந்திய உப கண்டத்தில் தமிழ் நாடு இன்றுள்ள முதன்மை நிலைக்குக் அடிப்படைக் காரணம் எனலாம்.

சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்ததன் மூலம் அந்தக் கட்சியும், அந்தக் கட்சியில் இருந்து உருவான அ.தி.மு.க.வும் தமிழ் நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்தின. இன்றும் கூட இந்தியாவின் முன்னணி மாநிலமாக, வளர்ச்சி பெற்ற மாநிலமாக, அமைதி நிலவும் மாநிலமாக, மத நல்லிணக்கம் கொண்ட மாநிலமாகத் தமிழ் நாடு விளங்கக் காரணம் தி.மு.க. முன்வைத்த திட்டங்களும், அவற்றை அடியொற்றி அ.தி.மு.க. செயற்பட்ட விதமுமே.

திராவிட சித்தாந்தம் என்பது அடிப்படையில் பார்ப்பனியத்துக்கு எதிரானது. அறிவியல் அடிப்படையைக் கொண்டது. இந்துத்துவா என்ற பாசிச சித்தாந்தத்தைக் கொண்ட பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அதன் சித்தாந்தத் தலைமையான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் கண்ணில் வீழ்ந்த முள்ளாகத் துருத்திக் கொண்டிருப்பது தெற்கில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பெரியாரியச் சிந்தனை. அந்தப் பகுத்தறிவுச் சிந்தனையை முறியடிப்பதன் ஊடாக தனது வெற்றிக் கொடியை இந்திய உப கண்டம் முழுவதும் நாட்டிவிடத் துடிக்கின்றது பா.ஜ.க. அதற்குத் தடையாக இருப்பது தி.மு.க.வும் அதன் தோழமை இயக்கங்களுமே.

தமிழ் நாட்டில் எப்பாடுபட்டாவது காலூன்றத் துடிக்கும் இந்துத்துவ பாசிசம் தி.மு.க.வைத் தோற்கடிப்பதன் ஊடாகவே இது சாத்தியம் என் நினைக்கின்றது. அடுத்துக் கெடுப்பதில் வல்ல பா.ஜ.க. தமிழ் நாட்டின் ஆளுங் கட்சியான அ.தி.மு.க.வைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது.

ஜெயலலிதாவின் மறைவும், அ.தி.மு.க. கட்சிப் பிரமுகர்களின் பேராசையும், ஊழலும் பா.ஜ.க.வுக்கு மிக வாய்ப்பாகப் போய்விட்டது. பின் வாசல் கதவு வழியாக ஆட்சியைப் பிடிப்பதில் வல்லவர்களான மோடி மற்றும் அமித் சா ஆகிய இருவரும் அ.தி.மு.க. வுடன் கூட்டு வைத்ததன் வழியாக தேர்தல் முடிந்ததும் அக் கட்சியையே விழுங்கிச் செரிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்தக் கபட நோக்கத்தைத் தெரிந்து கொண்ட பின்னரும் வேறு வழியின்றி, பா.ஜ.க. சொல் கேட்டு தலையாட்டிப் பொம்மைகளாக அ.தி.மு.க. தலைவர்கள் உள்ளனர்.

ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெறப் போகும் தேர்தலில் தமது அணி வெற்றிபெறப் போவதில்லை என்பதை அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் நன்கு அறியும். அ.தி.மு.க.வின் இலக்கு தி.மு.க. வெற்றி பெற்றாலும் தாம் பலம் பொருந்திய ஒரு எதிர்க் கட்சியாக சட்ட சபையில் அமர வேண்டும் என்பதே. பா.ஜ.க.வின் இலக்கு ஆகக் குறைந்தது ஒரு ஆசனத்தையாவது பெற்றுவிட வேண்டும் என்பதே. அவ்வாறு பெற்று விட்டால், சட்ட சபைக்குத் தெரிவாகும் அ.தி.மு.க. உறுப்பினர்களைத் தன் வசம் இழுத்து தன்னைப் பலப்படுத்திக் கொள்வதுடன், 2026 இல் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை தி.மு.க.வுக்கும் தமது கட்சிக்கும் இடையிலான மோதலாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே.

இத்தகைய ஒரு காட்சியை மனதில் வைத்துக் கொண்டே, தி.மு.க.விற்குக் கிடைக்கும் வாக்குகளைச் சிதைக்கும் நோக்கில் பல்வேறு கட்சிகளையும், அணிகளையும் களத்தில் இறக்கியுள்ளது பா.ஜ.க. கிறிஸ்தவ மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக முன்னைநாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் 20 தொகுதிகளில் போட்டி. முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக ஓவைசி. தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளைப் பிரிக்க புதிய தமிழகம் மருத்துவர் கிருஸ்ணசாமி. கட்சி சாரா நடுநிலையாளர்கள்; வாக்குகளைக் கவர மக்கள் நீதி மய்யம். இளைஞர்களைக் கவர நாம் தமிழர் சீமான். அ.தி.மு.க. அதிருப்பதியாளர்களின் வாக்குகள் தி.மு.க. பக்கம் சென்றுவிடாமல் தடுக்க அ.ம.மு.க.

தமக்கு முன்னால் உள்ள சவால்கள் யாவை என்பதை தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் நன்கு உணர்ந்துள்ளன என்பதை அவற்றின் போக்கில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகின்றது. தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிப்பது மாத்திரமன்றி, இந்திய மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த மனித குலத்துக்கே எதிரான பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவை புரிந்துள்ளன. அதற்கான மிகச் சரியான தருணம் இந்தத் தேர்தல் என்பதை அந்த அணியில் உள்ள கட்சிகள் புரிந்து வைத்திருப்பதன் விளைவே தொகுதிப் பங்கீடு விடயத்தில் அவை காட்டிய நெகிழ்வுப் போக்குக்குக் காரணம் எனலாம். தொகுதிப் பங்கீடு விடயத்தில் கூட்டணிக் கட்சிகளைக் கொம்பு சீவி விட்டு, ஒன்றோடு ஒன்று மோதவிட்டு கூட்டணியைக் கலகலக்கச் செய்து விடலாம் என பா.ஜ.க. செய்த தந்திரங்கள் எவையும் பலிக்கவில்லை.

திராவிட இயக்கத்தின் சாதனைகள் எனப் பட்டியலிடப்பட்ட பல விடயங்களை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசாங்கம் நீர்த்துப்போகச் செய்யும் வேலைகளில் படிப்படியாக ஈடுபட்டு வருகின்றது. அ.தி.மு.க. அரசாங்கம் அவை தொடர்பில் கண்டு கொள்ளாமல் இருப்பது மட்டுமன்றி அத்தகைய முயற்சிகளுக்குப் பக்கபலமாகவும் நின்று செயற்பட்டு வருகின்றது.

ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் எதிரான பகைமை என்பது சுமார் இரண்டாயிரம் ஆண்டுப் பழமை மிக்கது. உலகின் மூத்த குடி என வர்ணிக்கப்படும் தமிழ்க் குடியின் செழுமைமிகு பண்பாடு ஆரிய இறக்குமதியான வைதிக மதத்தினால் காவு கொள்ளப்பட்டதில் இருந்து இந்தப் பகைமை தொடங்கியது. இந்து மதம் என்ற போர்வையிலான ஆரியத் திணிப்புக்கு எதிரான கலகக் குரல்கள் காலம் முழுவதும் ஒலித்து வந்தமையை வரலாற்று நிகழ்வுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். சித்தர்களால் தொடங்கப்பட்ட இந்தக் கலகம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இன்று திராவிட இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிறப்பால் மனிதர்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என வகைப்படுத்தும் சனாதனச் சிந்தனைக்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற பண்பாட்டைக் கொண்ட தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை தந்தை பெரியார் முதல் பலரும் உரத்துச் சொல்லி வந்தாலும், தன்னை உருமாற்றிக் கொள்வதில் வல்லதான சனாதனம் பல்வேறு வழிகள் ஊடாகத் தமிழ்ப் பண்பாட்டையும், அதன் பழம் பெருமையையும் அழித்துவிட முயற்சித்துக் கொண்டே இருக்கின்றது. இந்தப் போட்டா போட்டியின் ஒரு நீட்சியாகவே தற்போதைய தமிழ் நாட்டுத் தேர்தல் பார்க்கப்படுகின்றது.

ஒரு மாநிலத் தேர்தலை இவ்வளவு நுணுகி ஆராய வேண்டுமா என அப்பாவித்தனமாகச் சிந்திப்பவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டியது ஒன்றையே. களத்தில் நிற்கும் கட்சிகள் யாவும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்திலேயே இல்லாத தி.மு.க. வைத் தோற்கடிக்க நினைப்பதேன்? இந்தக் கேள்விக்கான பதிலிலேயே விடை உள்ளது.

தமிழ் நாட்டுத் தேர்தல் தொடர்பிலான பல கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அனைத்துக் கருத்துக் கணிப்புகளுமே இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றிபெறும் என்பதாகவே உள்ளன.

இந்துப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் “234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றிபெறும்” என்கிறார். அவரது கருத்தின்படி இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி துடைத்தெறியப்படும். இது மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாகக் கூட இருக்கலாம். கள நிலவரங்களும் தி.மு.க. அணிக்குச் சாதகமாக இருப்பது போலவே தென்படுகின்றன. ஆனால், சனாதன சக்திகளை குறைவாக மதிப்பிட முடியாது. அவை எப்போதும் போலவே தமது வளங்கள் யாவற்றையும் பாவித்து தமது வாழ்நாள் எதிரியான தி.மு.க. அணியின் வெற்றியைத் தடுத்துவிட அல்லது வெற்றியைப் பறித்துவிட முயற்சி செய்யும் என்பது வெள்ளிடைமலை.

ஏலவே, ஏப்ரல் 6 ஆம் திகதி அவசர அவசரமாகத் தேர்தலை நடாத்திவிட்டு, வாக்கு எண்ணிக்கையை மே 2 ஆம் திகதிக்குத் தள்ளிப் போட்டிருப்பதே சந்தேகத்துக்கு இலக்காகி உள்ளமையைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, தேர்தல் காலத்திலோ அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ எதுவும் நடக்கலாம்.

எனவே, இந்தத் தேர்தலில் தி.மு.க. அணியை ஆதரிப்பவர்கள் மாத்திரமன்றி ஜனநாயகத்தை நேசிப்பவர்கள், பாசிசத்தை எதிர்ப்பவர்கள், சனாதனத்தை வெறுப்பவர்கள் என அனைத்துச் சக்திகளும் தி.மு.க. அணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதுவொன்றே, இந்தியாவில் தலையெடுக்க நினைக்கும் பாசிச சக்திகளுக்கும், உலகெங்கும் அதிகாரத்துக்கு வரத் துடிக்கும் அத்தகைய சிந்தனையாளர்களுக்கும் எச்சரிக்கையாக அமையக் கூடும்.

Leave A Reply

Your email address will not be published.