கொரோனா மீண்டும் தாண்டவம்: கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அமைச்சு முடிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் 3 ஆவது அலை தாக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, இந்தத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்றைய மதிப்பாய்வுக் கூட்டத்தின்போது தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறியதையடுத்தே நாட்டில் கொரோனாத் தொற்றப் பரவல் தீவிரமடைந்துள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய கொரோனாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின்படி நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளன. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக அபராதங்கள் விதிக்கப்படவுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோருக்கான விசேட தனிமைப்படுத்தல் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கொரோனாத் தொற்றாளர்களுக்கு தேவையான ஹை ப்ளோர் ஒட்சிசனை வழங்குதல், தொற்றாளர்களின் தகவல்களைத் திரட்டும் பணிகளை விரைவுபடுத்தல் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மேலதிக பாதுகாப்பு அங்கிகளை வழங்குதல் ஆகியவை குறித்தும் மதிப்பாய்வுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு நாடளாவிய ரீதியில், மேலும் பல வைத்தியசாலைகளை இனங்காணல் மற்றும் மேம்படுத்தல், கொரோனா நோயாளர்களின் நோய் நிலைமைகளுக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்தி பொருத்தமான வைத்தியசாலைகளில் சேர்த்து தேவையான சிகிச்சையை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் அதேவேளை, ஏனைய நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தடையின்றி வழங்குதல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.