குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.

குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டுவசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில் வைத்து தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கினார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கென முன்மொழியப்பட்ட வீட்டுத்திட்டங்கள் மற்றும் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.

அத்திட்டத்தை எவ்வித தாமதமுமின்றி துரிதமாக நிறைவுசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதமர் துறை சார்ந்த அமைச்சர் என்ற ரீதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் பம்பலபிட்டிய மற்றும் நாராஹேன்பிட பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள முன்மொழியப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களை தெளிவூட்டி பலருக்கு வீட்டு வசதிகள் உரித்தாகும் வகையில் செயற்படுத்துமாறும் கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, இராஜாங்க அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் டீ.ஏ.பியசேன வீரரத்ன, பிரதி பொது முகாமையாளர் கே.ஏ.ஜானக, சட்ட அதிகாரி டீ.எம்.ஜயலத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Leave A Reply

Your email address will not be published.