இராணுவத்தினருக்குத் தெரியாமல் நினைவுத்தூபியை உடைத்தது யார்? – கோட்டாவிடம் பொன்சேகா கேள்வி.

“இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி அடித்துடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று இராணுவத்தினரும் பொலிஸாரும் கூறியுள்ளனர். அப்படியாயின் நினைவுத் தூபியை அடித்துடைத்தது யார்? பாதுகாப்புப் படையினரின் கண்களுக்குத் தெரியாமல் இரவு நேரத்தில் யார் வந்தது நினைவுத் தூபியை அடித்துடைத்தார்கள்? பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரிடம் மேற்படி கேள்வியை நான் கேட்க விரும்புகின்றேன்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி இடித்தழிப்புத் தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போரில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாகவே நினைவுத் தூபி நிறுவப்பட்டிருந்தது. கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் மக்கள் அங்கு சென்று நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த எந்தவித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை.
ஆனால், இந்த அரசு நினைவேந்தல் நிகழ்வை நடத்தத் தடை விதித்தது மட்டுமன்றி முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபியையும் அடித்துடைக்க வழியமைத்துக் கொடுத்துள்ளது.

நினைவுத் தூபியை அடித்துடைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ராஜபக்ச அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் தமிழ் மக்களைப் பழிவாங்கும் விதத்தில் செயற்படுகின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.