சிகிச்சை நிலையங்களில் பெரும் இடப்பற்றாக்குறை! தொற்றாளர்களை வீடுகளில் கண்காணிக்க இதுவே காரணம் என்கிறார் சவேந்திர…

“நாட்டில் தற்போது நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் தற்போது 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், இன்று திங்கட்கிழமை தொடக்கம் நோய் அறிகுறி இல்லாமல் அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற வேண்டும் என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது. சிகிச்சை இடங்களில் காணப்படும் இடப்பற்றாக்குறையே இதற்குப் பிரதான காரணமாகும்.”

இவ்வாறு இராணுவத் தளபதியும் கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அறிகுறிகளற்ற தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்களான பேராசிரியர் சன்னஜயசுமன்ன மற்றும் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே ஆகியோர் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். ஆனாலும், அவ்வாறானதொரு திட்டம் இல்லை என்று இராணுவத் தளபதி மறுத்திருந்தார். இந்த நிலையிலேயே மேற்படி கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மருத்துவர்களால் வீடுகளில் கவனிக்கப்படும் நோய் அறிகுறி இல்லாத தொற்றாளர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். வீடுகளும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். அந்த வீட்டில் இருக்கும் ஏனையோரும் வெளியில் செல்ல முடியாதவாறு தனிமைப்படுத்தப்படுவார்கள். வீடுகளில் கவனிக்கப்படும் நோய் அறிகுறி இல்லாத தொற்றாளர்களின் நிலைமை மோசமடைந்தால் மட்டும் அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவார்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.