பி.சி.ஆர். இயந்திரத்துக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை! – கொடையாளர்கள் உதவலாம் என அறிவிப்பு.

வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு பி.சி.ஆர். இயந்திரத்தை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு பல மாதங்களாகியும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொடையாளர்கள் விரும்பினால் பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து வழங்க முடியும் என்று வடக்கு சுகாதாரத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

வடக்கில் தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. வடக்கில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்திலுமே சோதனை இதுவரை மேற்கொள்ளப்படுகின்றது.

வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து தருமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு பல மாதங்களாகின்றது. இதுவரை பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்படவில்லை.

தென்னிலங்கையில் பெரும் வணிக நிறுவனங்கள், கொடையாளர்களே பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து வழங்குகின்றனர். அதேபோன்று வவுனியா மருத்துவமனைக்கும் பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து வழங்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பி.சி.ஆர். இயந்திரம் மேலதிகமாகக் கிடைக்கப் பெற்றால் சோதனை முடிவுகளை உடனுக்கு உடன் வெளியிடக் கூடியதாக இருக்கும் என்று வடக்கு சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.