புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின் விபத்துக்கான காரணம் வெளியானது
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரதியமைச்சரும் புத்தளம் நகர சபைத் தலைவருமான கே.ஏ.பாயிஸ் நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி அகால மரமடைந்தார். அவர் இறக்கும்போது அவருக்கு வயது 52.
புத்தளம் வண்ணாத்துவில்லு பிரதேசத்திலுள்ள தனது தோட்டத்துக்கு நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கச் சென்ற அவர், இறால் மடு குளத்தில் குளித்துவிட்டு , எலுவன்குளம் வீதிக்குள் பிரவேசிக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
திறந்த கெப் வண்டியின் பின்புறமாக அமர்ந்து பயணித்த பாயிஸ், வாகனத்திலிருந்து வெளியே வீசப்பட்டதாகவும் அதனால் அவரது முகத்திலும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ளனர்.
எனினும் சம்பவம் இடம்பெற்ற சமயம் அவருடன் பயணித்த அவரது சாரதி உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த கே.ஏ.பாயிஸ் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதே அவர் மரணித்து விட்டதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் புத்தளம் மற்றும் வண்ணாத்தவில்லு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் PCR மற்றும் பிரேத பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து, நகர பிதா பாயிஸுடன் குறித்த கெப் வண்டியில் பயணித்திருந்த சாரதி உள்ளிட்ட மூவரை வண்ணாத்துவில்லு பொலிஸார் இன்று (24) அதிகாலை கைது செய்தனர்.
அத்துடன் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடமும் புத்தளம் பொலிஸ் விசேட தடயவியல் பிரிவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், புத்தளம் நகர சபைக்கு சொந்தமான விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனமும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக சம்பவத்தை நேரில் கண்டவர்களின் வாக்குமூலங்களையும் பொலிஸார் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் மதுபோதையில் இருந்தமை மருத்துவ அறிக்கை ஊடாக உறுதி செய்யப்பட்டது.
இதன்போது, புத்தளம் நகர பிதா பாயிஸ் , கெப் வாகனத்தில் இருந்து விழுந்தமையால், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்தி ஒருவரின் மரணத்துக்கு காரணமாக இருந்தமை தொடர்பில் கெப் சாரதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு சாரதியை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏனைய இருவரும் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, பிசிஆர் பரிசோதனையில் கொவிட் -19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு நகர பிதா பாயிஸின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட பிரமுகர்கள் பலரும் பாயிஸின் இல்லத்துக்கு விஜயம் செய்தனர்.
இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்ணான்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் பாயிஸின் வீட்டுக்கு விஜயம் செய்து பூதவுடலுக்கு மரியாதை செய்துள்ளனர்.