மின் கட்டணம் திடீரென உயர்வு: கர்நாடகாவில் ‘ஷாக்’ கொடுத்த ஒழுங்குமுறை ஆணையம்

கர்நாடகாவில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு திடீரென 30 பைசா கட்டணம் உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்ததையடுத்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, சமையல் எரிவாயு விலையும் உயர்கிறது, இதில் மின் கட்டணத்தையும் உயர்த்தினால் கோவிட்19 காலக்கட்டத்தில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

கொரோனாவினால் ஊரடங்கு போடப்பட்டு அன்றாட வருமானத்திற்கே கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தலாமா என்று அங்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது.

ஐந்து மின் வினியோக நிறுவனங்கள், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதால், 1 யூனிட்டுக்கு, 83 பைசா – 168 பைசா வரை உயர்த்தும்படி, கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தன.இந்நிலையில், மாநிலம் முழுதும், 1 யூனிட்டுக்கு, 30 பைசா உயர்த்தி நேற்று ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சராசரியாக யூனிட்டுக்கு, 3.84 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.புதிய கட்டணப்படி, பெங்களூரை பொறுத்த வரையில், வீட்டு பயன்பாட்டுக்கு, முதல், 50 யூனிட் வரை, ஒவ்வொரு யூனிட்டுக்கும், 4.10 ரூபாய்; 51 – 100 யூனிட் வரை, 5.55 ரூபாய்; 101 – 200 யூனிட் வரை, 7.10 ரூபாய்; 200 யூனிட்டுக்கு மேல், 8.15 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டுக்கு, முதல் 50 யூனிட் வரை, ஒவ்வொரு யூனிட்டுக்கும், 8.35 ரூபாய்; 50 யூனிட்டுக்கு மேல், 9.35 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டண உயர்வு, கடந்த ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.