தயாரா இருங்க; வரும் ஆகஸ்ட் 2 முதல் – வெளியான அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது உடல்ரீதியாக மட்டுமின்றி, வேலைவாய்ப்புகள் சார்ந்தும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்வு செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. முதல் அலை ஓய்ந்த சில மாதங்களுக்குள் அடுத்த அலை ஏற்பட்டது. விரைவில் கோவிட்-19 இரண்டாவது அலை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சிவில் சர்வீஸ் 2020க்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 23ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதையடுத்து நேர்முகத்தேர்வை ஏப்ரல் 26ஆம் தேதி நடத்த ஆணையம் முடிவு செய்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த சுற்றுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

யுபிஎஸ்சி-யை பொறுத்தவரை மூன்று படிநிலைகளாக தேர்வுகளை நடத்தி வருகிறது. அதாவது, முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.

இந்நிலையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், களநிலவரத்தை தீவிரமாக ஆய்வு செய்த ஆணையம் ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸ் 2020க்கான நேர்முகத்தேர்வு வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் நடத்தப்படும். இதற்கான கடிதங்கள் விரைவில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதனை www.upsc.gov.in அல்லது www.upsconline.in இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத்தேர்விற்கான தேதி மற்றும் நேரத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்று யாரும் கோரிக்கை விடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.