ஆட்சி மாற்றத்துக்கு ஒன்றிணையுங்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஹரின் அழைப்பு.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்துக்கு முயற்சிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியினுள் தேவையற்ற பயத்தை உருவாக்கும் தேவை யாருக்கு உள்ளது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவி இன்னொருவருக்கு செல்லக் கூடும் என்ற பயம் கட்சியினுள் நிலவுகின்றதா என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ என்பது உறுதியாக இருக்கும்போது, அதனை விசேடமாக உறுதிப்படுத்திக்கொள்ள வாக்கெடுப்பு நடத்தியது முட்டாள்தனமான செயற்பாடு என்றும் ஹரின் சாடினார்.

கட்சியில் கருத்து வேறுபாடுகள் இல்லை என்றும், தான் இரண்டு மாத கால விடுமுறையில் இருப்பதால் அது குறித்து விளக்கமாகக் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியினுள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை யாருக்கு ஏற்பட்டது என்பதைத் தேடிப் பார்க்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைய மாட்டார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

எனினும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்துக்கு முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.