அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையிடுவது மக்களாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் கொடுஞ்செயல் – சீமான்

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழகர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்யாத குற்றத்திற்காகக் கொடுஞ்சிறைவாசத்தை அனுபவித்து வரும் தம்பி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே உலகெங்கும் பரவி வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் ஒற்றைப்பெருவிருப்பமாக இருக்கிறது. ஆகவேதான், எழுவர் விடுதலை என்பது இனத்தின் விடுதலை எனும் தார்மீக முழக்கத்தை முன்வைத்துப் போராடுகிறோம்.

மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வுசெய்யப்படாத ஆளுநர் தடுத்து முட்டுக்கட்டையிடுவது மக்களாட்சித்தத்துவத்தையே சீர்குலைக்கும் கொடுஞ்செயல்; வெளிப்படையாக நிகழ்ந்தேறும் ஜனநாயகப்படுகொலை!

ஆகவே, தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, மாநிலத்தின் அதிகாரத்தை குடியரசுத்தலைவருக்குத் தாரைவார்த்து செய்த தவறை சரிசெய்துகொள்ள, 161வது சட்டப்பிரிவின்படி உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் அழுத்தத்தின் வாயிலாகவும், சட்டநெருக்கடியின் மூலமாகவும் அதற்கு ஒப்புதலைப்பெற்று, மாநிலத்தின் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட வேண்டும் எனவும், அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படும் மாநிலத் தன்னாட்சிக்கு உயிரூட்ட எழுவர் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

மேலும், விடுதலையைச் சாத்தியப்படுத்தும் இவ்விடைப்பட்ட காலத்தில் மாநில அரசிடமிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, எழுவருக்கும் நீண்ட சிறைவிடுப்பை அளிக்க வேண்டுமெனவும் கோருகிறேன்.” இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஏழுவர் விடுதலை குறித்து கருத்து கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுனரின் கடமை ஆகும். அதை அவர் தட்டிக்கழிக்க முடியாது. இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப முடியாது.” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.