இறப்பு சான்றிதழை தவறாக வழங்கினால் கொரோனா நிவாரண தொகை எப்படி போய் சேரும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

கொரோனா காலத்தில் இணை நோய்களால் மரணமடைந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா தொற்று பாதித்து பலியாகும் நபர்களுக்கு, கொரோனா காரணமான மரணம் என இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படாததால், மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிவாரண உதவிகள் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சக வழக்கறிஞர் கண்ணன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், அவர் மூச்சுத்திணறலால் இறந்தார் என சான்று வழங்கப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா மரணம் என இறப்பு சான்றிதழில் குறிப்பிடாததால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் அரசின் நிதியுதவி கிடைக்கப்பெறுவது தடைபடுவதாகவும் மனுவில் கவலை தெரிவித்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதுமே புகார்கள் எழுந்து வருவதாக தெரிவித்த நீதிபதிகள், இறப்பு சான்றிதழ்களை தவறாக வழங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நிவாரண தொகை போய் சேரும் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனா பாசிடிவ் சான்றிதழ் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மரணங்களை கொரோனா மரணங்கள் என பதிவு செய்வதில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால்தான், எதிர்காலத்தில் தொற்று பரவலை சமாளிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும் எனவும், இறப்புகளை துல்லியமாக குறிப்பிடுவது, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டனர்.

இணை நோய்கள் உடையவர்களும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதால், கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.