கொரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க இயலாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பேரிடரால் உயிரிழப்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கு பேரிடா் மேலாண்மை சட்டம் வழிவகுத்துள்ளதாகவும், அதன்படி இழப்பீட்டை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரா் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், பிரமாணப் பத்திரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டு மக்களைக் காப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. வருவாய் குறைந்து, மருத்துவம் சாா்ந்த செலவினங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், மனுதாரா் கோருவது போல் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க இயலாது. அவ்வாறு வழங்குவது மத்திய, மாநில அரசுகளின் நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கும்.

நிா்வாகக் குழப்பம்: கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய, மாநில அரசுகள் வசம் உள்ள நிதியை இழப்பீடாக வழங்கினால், பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்; கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் தொய்வடையும்; சுகாதாரம் சாா்ந்த திட்டங்களுக்கு செலவிட முடியாமல் போகும்.

இழப்பீடு வழங்குவது தொடா்பாக உரிய அரசு அதிகாரிகளே முடிவு செய்ய முடியும் என்று பேரிடா் மேலாண்மை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் கையிலெடுத்துக் கொள்ள முடியாது. இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது நிா்வாகக் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.

சா்வதேச நடைமுறை: மக்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமே அவா்களுக்கு செய்யப்படும் உதவி என்ற குறுகிய மனப்பான்மை கூடாது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்பட்ட பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள், சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள், சுகாதார உதவிகள் உள்ளிட்டவற்றை மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து முன்னெடுத்து வருகின்றன.

இந்நடவடிக்கைகள் காரணமாகவும் மக்கள் பெரும் பலனடைந்து வருகின்றனா். மற்ற நாடுகளும் இதே நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டபிறகு ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.