மற்றுமொரு கொரோனா அலை உருவாகியுள்ளதா? பாராளுமன்றத்தில் சஜித் கேள்வி.

நாட்டில் கடந்த சில வாரங்களாகக் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் திடீரென ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது நாட்டில் மற்றுமொரு கொரோனா அலை உருவாகியுள்ளதையே காட்டுகின்றது என்பதை அரசு ஏற்றுக்கொள்கின்றதா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த சில வாரங்களாகத் திடீரென நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக உள்ளது. இதனால் இது தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும்.

கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ள கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கைக்கமைய , நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை உருவாகி வருகின்றது என்பதை அரசு ஏற்றுக்கொள்கின்றதா?

கடந்த 10 நாட்களில் பதிவான கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை, மரணங்களின் எண்ணிக்கை, செய்யப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் தற்போது சிகிச்சை பெற்றுவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அரசு வெளியிடுமா?

இதேவேளை, உலகம் முழுவதும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் திரிபுகள் என்ன? அவற்றில் நாட்டில் பதிவாகியுள்ள திரிபுகள் எவை? தற்போது நாட்டில் வழங்கப்படும் தடுப்பூசிகள் குறித்த திரிபுகளை எதிர்கொள்ளக் கூடியனவா?

மேலும், ஒரு கொரோனா அலை உருவாகி வரும் நிலையில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒழுங்குவிதிகளைத் தளர்த்துவது பொருத்தமானதா? சகல அரச ஊழியர்களும் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாப் பரவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டிய தொற்றா நோயுடன் தொடர்புடையவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மற்றும் சிறிய பிள்ளைகள் உள்ள உத்தியோகத்தர்கள் அந்த ஆபத்துக்குள் தள்ளப்பட மாட்டார்களா?

இதேவேளை, சுகாதாரத்துறையிடம் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களின் எண்ணிக்கை, ஒட்சிசன், பரிசோதனை அளவு, சுகாதாரப் பணியாளர்களின் அளவு எவ்வளவு , இவை எதிர்காலத்தில் கொரோனா அலை ஏற்பட்டால் அதனைத் தடுக்கப்போதுமானதா?

அத்துடன் தற்போது கொரோனாத் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை, தொற்றால் சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான புள்ளி விபரங்களைச் சமர்ப்பிப்பீர்களா?” – என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க நாளை 5ஆம் திகதி வரை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கால அவகாசம் கோரினார்.

Leave A Reply

Your email address will not be published.