டெங்கு பாதிப்பு அக்டோபர்- டிசம்பர் மாதங்களில் இரட்டிப்பாகும் – பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

அக்டோபர்- டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு இரட்டிப்பாகும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இதுவரை 2919 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

4வது மெகா தடுப்பூசி முகாமையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 22 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் போடவில்லை என்று தெரிவித்த அவர், இன்னமும் தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பெற்று வருவதாக கூறினார்.

மேலும், “தமிழகத்தில் முதியோர்களில் 42% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார்கள். மரபணு ஆய்வகத்தில் இது வரை 20 மாதிரிகள் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் டெல்டா உருமாறிய கொரோனா தான்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு இரட்டிப்பாகும். 2919 பேர் இது வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 20 பேர் டெங்குவால் பாதிப்படைகின்றனர். இதுவரை 2 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.