தடுப்பூசி அடையாள அட்டை சுதந்திரத்துக்கு எதிரானதா ? : சண் தவராஜா

உலகில் அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டு என்பவற்றுக்கு இணையான ஒரு ஆவணமாக மாறியிருக்கின்றது கொரோனா தடுப்பூசி சான்றிதழ்.

நாட்டுக்கு நாடு பயணமாகட்டும், சில இடங்களில் நாடுகளுக்கு உள்ளேயேயான பயணங்களாகட்டும், நாட்டு எல்லையினுள் அமைந்துள்ள உணவகங்கள், பொழுதுபோக்கிடங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அங்காடிகள் எனப் பல இடங்களுக்குமான நுழைவு அனுமதியாகட்டும், இவை அனைத்தையும் அனுமதிக்கும் வல்லமையை இந்தத் தடுப்பூசிச் சான்றிதழ் பெற்றிருக்கின்றது. மனிதகுல வாழ்வில் மிகமிக அண்மையில் அறிமுகமான இந்தச் சான்றிதழ் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ள இன்றைய காலகட்டத்தில், முறையாகத் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு அந்தச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள உலகளாவிய அடிப்படையில் பெரும்பாலான மனிதர்கள் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, இந்தத் தடுப்பூசிச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதை மறுதலிக்கும் ஒரு சாரார், அரசாங்கங்களின் தடுப்பூசிச் சான்றிதழ்க் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், அத்தகைய முயற்சிக்கு எதிரான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கவன ஈர்ப்பு நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள், பரப்புரைகள், கையொப்ப வேட்டைகள், மக்கள் வாக்கெடுப்புகள் என பல ஜனநாயகமுறைகள் ஊடாக தமது கொள்கைகளுக்கு ஆதரவு கோரி வருகின்றனர். மேற்குலகின் பெரும்பாலான நாடுகளிலும் தடுப்பூசிச் சான்றிதழுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பரவலாக நடைபெற்றதை நாமறிவோம்.

அத்தகைய ஒரு ஆர்ப்பாட்டம் அண்மையில் சுவிற்சர்லாந்து நாட்டின் தலைநகர் பேர்ணிலும் நடைபெற்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி நடாத்தப்படவுள்ள கொரோனாத் தடுப்பூசிச் சான்றிதழை வலியுறுத்துவதற்கு எதிரான மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவு கோரவும், தங்கள் தரப்பின் பலத்தை எடுத்துக் காட்டவும் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அக்டோபர் 23ஆம் திகதி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல பத்தாயிரக் கணக்கானோர், சுவிற்சர்லாந்து நாட்டின் 26 மாநிலங்களிலும் இருந்து வருகைதந்து கலந்து கொண்டிருந்தனர். பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எந்தவித விதிமீறல்களும் இடம்பெறாத வண்ணம் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டதாகக் காவல்துறை சார்பிலே தெரிவிக்கப்பட்டிருந்தது. (இதற்கு முந்திய காலகட்டங்களில் பெரும்பாலும் வியாழக் கிழமை மாலை நேரங்களில். பேர்ண் நகரில் நடைபெற்ற அனுமதி பெறாத ஆர்ப்பாட்டங்களின் போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாரிய மோதல்கள் நடைபெற்றிருந்தன. பீரங்கிகளில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்த காவல்துறையினர் சில வேளைகளில் இரப்பர் குண்டுகளைப் பாவித்து துப்பாக்கிப் பிரயோகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.)

கிட்டிய கடந்தகாலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் அதிக எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டதாகப் பதிவாகியுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் “சுதந்திரம், சுதந்திரம்” என்ற கோசங்களை முழங்கியதை அவதானிக்க முடிந்தது.

உணவகங்கள் மற்றும் பொழுது போக்கு இடங்கள் என்பவற்றில் உள் நுழைவதற்கு தடுப்பூசிச் சான்றிதழ் அவசியம் என அரசாங்கம் அண்மையில் அறிமுகம் செய்த நடைமுறையை எதிர்ப்பவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒரு கல்லூரி மாணவி, “உணவகத்துக்குச் செல்லும் போது நான் தடுப்பூசிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது, பல்கலைக் கழகத்துக்குச் செல்லும் போது நான் தடுப்பூசிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது, நூல் நிலையத்துக்குச் சென்று ஒரு நூலை வாசிப்பதற்குக் கூட, நான் தடுப்பூசிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதுவா சுதந்திரம்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

யதார்த்தத்தில் அவரது கேள்வி நியாயமானதே. ஆனால், மாற்றுவழியாக என்னதான் உள்ளது?

உலகை அச்சுறுத்தும் கொள்ளை நோயான கொரோனாவை முழுவதுமாகக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் தவிக்கும் அரசாங்கங்கள் கைவசம் உள்ள ஒரே மார்க்கமான தடுப்பூசிகளை மக்கள் பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்குப் போராடி வருகின்றன. உலகில் எங்காவது ஒரு மூலையில் உள்ள ஒருவர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் வரையும், கொரோனாக் கொள்ளை நோயை வெற்றிகொள்ள முடியாது என்பதே தற்போதுவரையான அறிவியல்பூர்வமான நிலைப்பாடாக உள்ளது.

ஆரம்பத்தில், தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கே உலகம் பெரும்பாடுபட வேண்டியிருந்தது. பின்னர் அதன் விநியோகம் தொடர்பான சிக்கல்கள் எழுந்தன. உலகில் ஆகக்குறைந்த தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள கண்டம் எனக் கருதப்படும் ஆபிரிக்காவில் தற்போது நிலவும் ‘சிரிஞ்ச்’ எனப்படும் பீற்றுக் குழல்களுக்கான தட்டுப்பாடு, தடுப்பூசிகள் ஏற்றும் திட்டத்தில் தாமதத்தைத் தோற்றுவிக்கக் கூடும் எனக் கவலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 40 வீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது எனத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வருடம் முடிவடைய இன்னமும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் வெறும் ஐந்து நாடுகளில் மாத்திரமே இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது என்ற கவலைதரும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கண்டத்தில் தற்போதுவரை 77 மில்லியன் மக்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இது அந்தக் கண்டத்தின் மக்கள் தொகையில் வெறும் 6 விழுக்காடு என்பது நினைவில் கொள்ளத்தக்கது. அதேவேளை, உலகின் செல்வந்த நாடுகள் பலவற்றில் இந்த இலக்கைவிட அதிக விழுக்காடு மக்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலைமை இவ்வாறு இருக்க, தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் தரப்பில் மாற்று வழிமுறைகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில், தடுப்பூசிச் சான்றிதழ்க் கோரிக்கையை சுதந்திர மறுப்பாக உருவகம் செய்தல் சரியானதுதானா?

பொது வாழ்வில் ‘ஒருவருடைய சுதந்திரம் என்பது மற்றவரின் மூக்குநுனி வரையானதே’ எனச் சொல்லப்படுவது அறிந்ததே. எனது சுதந்திரம் இன்னொருவரின் உயிர்வாழும் உரிமைக்கு எதிரானதாக இருக்குமானால், அதுவும் மறுக்கப்பட வேண்டியதே. தடுப்பூசியை நாம் மாத்திரம் பெற்றுக் கொள்வதால் மாத்திரமன்றி, நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் பெற்றுக் கொண்டால் மாத்திரமே நான் மாத்திரமன்றி, அனைவரும் உயிரோடு வாழலாம் என்ற நிலையிருக்கையில் ‘ஊரோடு ஒத்து வாழ்தலே’ சரியானது.

உலக நாடுகள் பல்வேறு சார்புநிலை, எதிர்ப்பு நிலை அணிகளாகப் பிளவுண்டு கிடப்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. ஒன்றுக்கொண்று எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள நாடுகளும் கூட தடுப்பூசி விடயத்தில் ஒன்றுபட்டு நிற்பதைப் பார்க்க முடிகின்றது. கொள்கை அடிப்படையில் ஒன்றுக்கு ஒன்று முரணான நிலைப்பட்டில் உள்ள நாடுகளே – தமது முரண்பாடுகளைத் தள்ளிவைத்துவிட்டு – தடுப்பூசி விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கும் போது, மாற்றுத் திட்டம் எதுவும் இல்லாத நிலையில் ஒரு சாரார் ‘சுதந்திரம்’ என்ற அடிப்படையில் தம்மையும், ஏனையோரையும் ஆபத்துக்கு ஆளாக்குவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

சுதந்திரம் ஒவ்வொருவரினதும் பிறப்புரிமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், எது சுதந்திரம் என்பதில் தெளிவு இருக்க வேண்டியது அவசியமானது.

Leave A Reply

Your email address will not be published.