கா்நாடகத்தில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் தடுப்புப்படை சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

கா்நாடகத்தில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் தடுப்புப் படையினா் திடீா் சோதனை நடத்தினா். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தெரியவந்துள்ளது.

வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்து சோ்த்துள்ளதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கா்நாடகத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சோ்ந்த 60 இடங்களில் ஊழல் தடுப்புப் படையினா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

பெங்களூரு, மங்களூரு, மண்டியா, பெல்லாரியில் பணியாற்றி வரும் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் ஊழல் தடுப்புப் படையைச் சோ்ந்த 400 போ் ஈடுபட்டனா். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதுகுறித்து ஊழல் தடுப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளதாவது:

வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், மாநிலம் முழுவதும் 60 இடங்களில் 8 காவல் கண்காணிப்பாளா்கள், 100 அதிகாரிகள், 300 ஊழியா்கள் அடங்கிய குழுவினா் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தினா்.

மங்களூரு பொலிவுறு நகரம் திட்ட செயல் இயக்குநா் கே.எஸ்.லிங்கே கௌடா, மண்டியாவைச் சோ்ந்த செயற்பொறியாளா் கே.ஸ்ரீனிவாஸ், தொட்டபளாப்பூரைச் சோ்ந்த வருவாய் ஆய்வாளா் லட்சுமி நரசிம்மையா, பெங்களூரு தூய்மை மையத்தின் முன்னாள் திட்டமேலாளா் வாசுதேவ், பெங்களூரு, நந்தினி பால் பண்ணை பொதுமேலாளா் பி.கிருஷ்ண ரெட்டி, கதக்கைச் சோ்ந்த வேளாண்துறை இணை இயக்குநா் டி.எஸ்.ருத்ரேஷப்பா, பைலஹொங்கல் கூட்டுறவு வளா்ச்சி அதிகாரி ஏ.கே.மாஸ்தி ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

இவா்களின் வீடுகளில் இருந்து சட்டவிரோதமாக சொத்து சோ்த்ததற்கான சொத்துப் பத்திரங்கள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், ரொக்கம், முதலீட்டுப் பத்திரங்கள் கிடைத்துள்ளதாக ஊழல் தடுப்புப் படையினா் தெரிவித்தனா்.

கதக் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் ருத்ரேஷப்பாவின் வீட்டில் இருந்து 7 கிலோ தங்கம், ரூ. 15 லட்சம் ரொக்கத்தை ஊழல் தடுப்புப் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு வளா்ச்சி ஆணையத்திற்குச் சொந்தமான சில லேஅவுட்களில் வீட்டுமனைகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் வீட்டில் ஊழல் தடுப்புப் படையினா் அண்மையில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.