கெளதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்: வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு “ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ எனும் அமைப்பிடமிருந்து மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கம்பீரின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9.32 மணிக்கு “ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ அமைப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரித்து, முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து துணை காவல் ஆணையர் ஸ்வேதா சௌகான் கூறுகையில், “அடையாளம் தெரியாத நபர் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், கௌதம் கம்பீரையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், இந்த விவகாரத்தில் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை’ என்று அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.