துணுக்காய் பிரதேசத்தில் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் 2021 ஆம் ஆண்டிற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஒரு பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான கணணி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட யோகபுரம் மயில்வாகனம் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 2 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைக்கான கணணி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் தெரிவு செய்யப்பட்ட இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கு 50ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஐயன்குளம் தமிழ்த்தென்றல் விளையாட்டுக் கழகம், யோகபுரம் மேற்கு சிற்றி விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கே இவ்வாறு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கலாநிதி ராகவன் அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கதிர்வேல் செவ்வேள் குறித்த உபகரணகளை பாடசாலை முதல்வர் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் சார்பில் உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.