ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான அடிப்படை விலை ரூ.32,890 கோடி- கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரிப்பு.

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான அடிப்படை விலை ரூ.32,890 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட உரிமத்தொகையை விட 2 மடங்கு அதிகமாகும்.
ஐ.பி.எல். போட்டி மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. இதனால் இந்தப்போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் எப்போதுமே கடும் போட்டி இருக்கும்.

தற்போது ஐ.பி.எல். போட்டியை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. இந்த நிறுவனம் 2018 முதல் 2022 வரை ரூ.16,347.5 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை பெற்று இருந்தது.
அதற்கு முன்பு 2008 முதல் 2017 வரை சோனி நெட்வொர்க் ரூ.8,200 கோடிக்கு பெற்று ஒளிபரப்பு செய்தது. ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு வழங்கும் நடைமுறையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே தொடங்கி விட்டது.

2023-2027 ஆண்டு வரையிலான ஐ.பி.எல். தொடர்களை ஒளிபரப்புவதற்கான உரிமைக்கு கிரிக்கெட் வாரியம் டெண்டர் விடுத்து இருந்தது. டெண்டருக்கான அழைப்பிதழை மே 10-ந் தேதி வரை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் நடைபெறும்.

இந்த நிலையில் ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான அடிப்படை விலை ரூ.32,890 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட உரிமத்தொகையை விட 2 மடங்கு அதிகமாகும்.
அதிக தொகையை குறிப்பிடும் நிறுவனம் ஐ.பி.எல். உரிமத்தை பெறும். இந்த உரிமம் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்டார் மற்றும் டிஸ்னி நிறுவனம் இந்த முறை ஒளிபரப்பு ஏலத்தில் பங்கேற்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அமைப்பான வியாகாம், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையை பெற கடுமையாக போட்டியிடும் என்று தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.