நடிகை மீனா கணவர் மறைவு : ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அஞ்சலி.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமான நிலையில் நடிகர் ரஜினிகாந்த், பிரபுதேவா, சேரன், ரம்பா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டி.,யில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தார்.

கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு அதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி நேற்று(ஜூன் 28) இரவு உயிரிழந்தார்.

இது திரையுலக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். வித்யாசாகரின் உடல் சென்னையில் உள்ள மீனாவின் சைதாப்பேட்டை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ரஜினிகாந்த், பிரபுதேவா, ரம்பா குடும்பத்தார், விஜயகுமார் குடும்பத்தார், சேரன், மன்சூர் அலிகான், பழம்பெரும் நடிகை லட்சுமி, சங்கீதா, குஷ்பு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வித்யாசாகரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, மீனா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இன்று நண்பகலுக்கு மேல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.