எரிபொருள் நேரடிக் கொள்வனவுக்கு வடக்குக்கு அனுமதி! – அமைச்சருடனான சந்திப்பில் முடிவு.

“எரிபொருள் இறக்குமதியை நேரடியாக மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இணையத்துக்கு விசேட அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.”

இவ்வாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேயசேகர உறுதியளித்தார்.

வடக்கு மாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் இணையத்துக்கும், எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேயசேகரவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. சந்திப்பில் கலந்துகொண்ட இணையத்தின் தலைவர் ஜெ.ஸ்ரீசங்கர் இது தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது,

“இலங்கை அரசு வெளிநாடுகளிலிருந்து நேரடியாக எரிபொருளை இறக்குவதற்கான அனுமதியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது. அதற்கு அமைவாக, வடக்கு மாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் இணையம், பல்வேறு எரிபொருள் இறக்குமதி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தது.

இந்தநிலையில் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரைச் சந்தித்தோம். அவரும் அதற்கு இணங்கியுள்ளார். நாம் அவ்வாறு நேரடியாக இறக்குவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தயார் செய்வதாகவும் அவர் கூறினார். எரிபொருள் நேரடியாக நாம் இறக்கினாலும், எரிபொருளின் விலையில் மாற்றம் செய்ய முடியாது. அரசால் நிர்ணயிக்கும் விலைக்கே விற்பனை செய்ய வேண்டும்.

இதேவேளை, வடக்கு மாகாணத்துக்கு மண்ணெண்ணெய் விநியோகம் நீண்டகாலமாக இடம்பெறாமையையும் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினோம். இதனால் மீனவர்களும், விவசாயிகளும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தோம்.

இதையடுத்து, இரு வாரங்களுக்குள் வடக்கு மாகாணத்துக்கு மண்ணெண்ணெய் விநியோகத்துக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்தார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.