ஒரே ஊசியை வைத்து 30 மாணவர்களுக்கு தடுப்பூசி.. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரே ஊசியை பயன்படுத்தி 39 மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்திய அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் என்ற பகுதியில் ஜெயின் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஜிதேந்திரா என்ற சுகாதார பணியாளர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அந்த நபர் ஒரே ஊசியை வைத்து சுமார் 30 மாணவர்களுக்குத் தடுப்பூசி டோஸ்களை செலுத்தியுள்ளார். இதைக் கண்ட மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அவரிடம் தங்களின் சந்தேகத்தை கேட்டுள்ளனர். அதற்கு அவர், இதில் என்னை ஏன் குறை சொல்கிறீர்கள். நிர்வாகம் எனக்கு ஒரு சிரஞ்ச் மட்டும் தான் தந்துள்ளது. அப்படி இருக்க நான் என்ன செய்யட்டும் என்றுள்ளார் அசால்ட்டாக. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 9 முதல் 12 ஆம் வகுப்பை சேர்ந்தவர்கள்.

தொடர்ந்து, பெற்றோர் எழுப்பிய புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மேலும், அம்மாவட்ட தடுப்பூசி திட்ட பிரிவு தலைமை அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். எச்ஐவி பாதிப்பு பரவலுக்குப் பின் நாட்டில் 1990களில் இருந்து ஒரு முறை பயன்படுத்தும் டிஸ்போசபல் ஊசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் போன்ற அமைப்புகள் கூறியுள்ள வழிகாட்டுதல்களையே சுகாதாரத்துறை அமைச்சகம் பின்பற்றி வருகிறது.

நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 203 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 12-14 வயதினர் சுமார் 3.87 கோடி பேருக்கும், 15-18 வயதினர் 6.10 கோடி பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.