உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? – தேர்வு பணிகள் தொடக்கம்

நாட்டின் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா உள்ளார். இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் களமிறங்கியுள்ளது.

பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வதே வழக்கமான நடைமுறை. அதன்படி, தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என் வி ரமணா பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நீதிபதியாக இருப்பவரே புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.

எனவே, சீனியாரிட்டிபடி உச்ச நீதிமன்ற நீதிபதி யுயு லலித் அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் பெயரையே ரமணா சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யவார் எனவும் கூறப்படுகிறது. புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவரது பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே இருக்கும். வரும் நவம்பர் 8ஆம் தேதி யுயு லலித் ஓய்வு பெறுகிறார்.

அதேவேளை, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ரமணா ஒரு வருடம் நான்கு மாதம் பதவி வகிக்கிறார். இவரது காலகட்டத்தில், நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியத்திற்கு தலைமை ஏற்று, 11 உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 255 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமித்துள்ளார் என் வி ரமணா.

Leave A Reply

Your email address will not be published.