கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு பாலியல் வன்கொடுமையோ கொலையோ காரணம் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை காரணம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், மாணவி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதை விசாரித்து குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என பெண்ணின் பெற்றோர்கள் வலியுறுத்தியிருந்தனர். அதன் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இதில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி இளந்திரையன் உத்தரவில் மேலும் சில தகவல்களை பதிவு செய்துள்ளார்.

அதில், முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, பின்னர் இந்திய தண்டனை சட்டத்தின் மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவு, போக்சோ சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை சேர்த்துள்ளதாக என குறிப்பிட்டுள்ளார்.

12ஆம் வகுப்பு என்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு முக்கியமானது என்பதால், குடும்ப சூழ்நிலை குறித்து சிந்திக்காமல், தன் மனதை படிப்பில் செலுத்தி நன்றாக பிள்ளைகள் படிப்பார்கள் என்று பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை உறைவிட பள்ளியில் சேர்க்கின்றனர் என உத்தரவில் பதிவு செய்துள்ளார்.

மாணவி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தின்படி, மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதி, நன்றாக படிக்கச் சொல்வது ஆசிரியர் பணியில் ஒரு அங்கமாகுமே தவிர, தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

இரண்டு முறை செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் தமிழ்நாடு மருத்துவ குழு எடுத்த முடிவுகளை நீதிமன்றம் நியமித்த ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு ஏற்றுக்கொள்வதாக அதன் அறிக்கையிலிருந்து தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் வன்கொடுமையோ அல்லது கொலையோ காரணம் இல்லை என உறுதியாவதாகவும், அவ்வாறு பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு மாறாக மாணவியின் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி மாடியிலிருந்து விழும்போது மரத்தில் அடிபட்டதாலேயே உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட ரத்தக்கசிவுதான் உடலில் இருந்ததாக அறிக்கைகளில் இருந்து தெரியவருவதாகவும், குறிப்பிட்டுள்ளார். பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவி ரத்தத்தின் கறை அல்ல என்றும், வண்ணப்பூச்சு எனவும் நிபுணர்களின் அறிக்கை கூறுவதாகவும் நீதிபதி தன் உத்ததவில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியின் தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில், மாணவி வேதியியல் பாடம் படிப்பதில் சிரமப்பட்டது உறுதியாகி உள்ளதாகவும், அதே சமயம் இரு ஆசிரியைகள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ததும் தவறு என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.