வழங்கிய வாக்குறுதிகளை மீறும் அரசு; தேசிய பேரவையைப் புறக்கணிப்போம்! – சஜித் அணி அறிவிப்பு.

“மக்கள் எழுச்சி ஏற்பட்டபோது வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அரசு செயற்படுகின்றது. பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவதை விடுத்து, அரசியல் நடத்தப்படுகின்றது. எனவே, தேசிய பேரவையைப் புறக்கணிக்கும் முடிவையே எமது கட்சி பெரும்பாலும் எடுக்கும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரும் எதிரணி பிரதம கொறடாவுமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“குறுகிய காலத்துக்கு அரசு ஒன்று நிறுவப்பட வேண்டும், அமைச்சரவை மட்டுப்படுத்தப்பட வேண்டும், பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பன உட்பட முக்கிய பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஓர் அங்கமே தேசிய பேரவையாகும்.

தேசிய பேரவை அமைப்பதற்கே மூன்று மாதங்கள் எடுத்துள்ளன. அதற்கிடையில் ஆளுங்கட்சி அரசியலும் நடத்தி வருகின்றது. அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர், இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

போராட்ட காலத்தில் இருந்த அக்கறை தற்போது அரசிடம் இல்லை. எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக அது கருதுகின்றது.

குறிப்பாக கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப் பதவி எதிரணிகளுக்கு வழங்கப்படும் என்று சபாநாயகர் உறுதியளித்தார். தற்போது அவர் முடியாது என்கின்றார்.

எனவே, தேசிய பேரவை குறித்தும் எமக்கு ஐயப்பாடு உள்ளது. எனவே, அதனைப் புறக்கணிக்கும் முடிவையே கட்சி பெரும்பாலும் எடுக்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.