புதரில் பெண்குழந்தை! பால் கொடுத்து பசியாற்றிய காவலரின் மனைவி விடுத்த செய்தி!
உத்தரப் பிரதேசத்தில் புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தைக்கு காவலரின் மனைவி பால் கொடுத்து பசியாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
குழந்தைகளை வளர்க்க விரும்பாதவர்கள் உயிருக்கு ஆபத்தான வகையில் புதர்களில் விட்டுச்செல்லாமல், தயவு செய்து காப்பகத்தில் விட்டுச் செல்லுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் ஜோதி சிங். இவரின் கணவர் நொய்டா காவல் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார்.
இந்நிலையில், நொய்டாவிலுள்ள தனியார் பூங்காவின் அருகேவுள்ள புதரில் பச்சிளம் பெண் குழந்தை கடந்த 20ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தை காவல் நிலையத்திற்கு தூக்கிவரப்பட்டது.
குழந்தையின் பெற்றோர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் குழந்தையின் பெற்றோர் குறித்த எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனிடையே கடும் குளிரில் துணி சுற்றப்பட்டிருந்த குழந்தை, பசியால் அழ ஆரமித்துள்ளது. பச்சிளம் குழந்தை என்பதால் காவலர்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர். குழந்தை கடும் குளிரில் தவித்ததால், அங்கு வந்த காவலரின் மனைவி ஜோதி சிங், உடனடியாக குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்து கண்காணித்தும் வருகிறார். குழந்தையின் பெற்றோர் குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய ஜோதி சிங், குழந்தைக்கு இதுபோன்ற செயலைச் செய்ய எவ்வாறு அவர்களுக்கு மனம் வருகிறது. குழந்தை குளிரில் நடுங்கி அழுதுகொண்டிருந்ததை என்னால் தாங்க முடியவில்லை. என்னால் குழந்தை அழுவதைப் பார்த்துக்கொண்டு நிற்க முடியவில்லை. அதனால் உடனடியாக குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றினேன். நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். உங்களால் குழந்தையைப் பராமரிக்க முடியாது என்றால், குழந்தையை அப்படியே விட்டுவிடாதீர்கள். அதற்கென உள்ள ஆதரவற்றோர் இல்லம் அல்லது தொண்டு நிறுவனங்களில் விட்டுச் செல்லுங்கள். உங்களிடம் வளரவில்லை என்றாலும், அவர்கள் அங்கு வளருட்டும். பெற்றோர் இவ்வாறு செய்வது கண்டிக்கத்தக்கது என்றார்.