சொந்த ஊர் திரும்ப முடியாமல் அமர்நாத்தில் தவிக்கும் 21 தமிழர்கள்..!
அமர்நாத் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் 21 பேர் நிலச்சரிவு காரணமாக, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அமர்நாத் யாத்திரை சென்ற தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் 21 பேர் நிலச்சரிவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் முகாமில் தங்கியுள்ள தங்களை சொந்த ஊர் செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோயிலுக்கு தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21பேர் கடந்த 4ஆம் தேதி சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில் அங்கு தொடர்ந்து பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி – செல்வி தம்பதியினர் மற்றும் சின்னமனூரை சேர்ந்த செந்தில், ராஜாங்கம் ஆகிய 4 பேர் உள்ளனர்.
ஆனால் முகாமில் தங்க உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை எனவும், போக்குவரத்து சீராக இன்னும் நாட்களாகும் எனவும் அங்கிருப்பவர்கள் தெரிவிப்பதால், தங்களை சொந்த ஊர் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.