GCE (O/L) பரீட்சை இன்று ஆரம்பம்
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6 இலட்சத்து 22,352 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதுடன், இன்று ஆரம்பமாகும் பரீட்சை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த மேற்படி பரீட்சை நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக ஒத்திப் போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிலையங்கள் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு முழுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
நாடளாவிய ரீதியில் 4513 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதுடன் 542 இணைப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு இணைப்பு மத்திய நிலையங்கள் என 40 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தந்த பகுதிகளில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அது தொடர்பில் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.