கொரோனாவைவிட பொலித்தீன் ஆபத்தானது – யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையானது பயங்கரவாதம் மற்றும் கொரோனாவை விட மிகவும் ஆபத்தானது என்று மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவகற்றல் செயற்பாடு இராணுவத்தினரால் இன்று (12) முன்னெடுக்கப்பட்டன.


இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

“இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் கொரோனா ஆகியவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது. இந்நிலையில் பொலித்தீன் பாவனை மற்றும் பிளாஸ்டிக் பாவனையில் இருந்து மக்களை பாதுகாக்கின்ற வேலைத்திட்டத்தினை தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.

அதன் முதற்கட்டமாக, இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் குறித்த திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். அந்தவகையில் இவ்விடயங்களில் பொது மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் அன்றாடம், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

இதனை நிறுத்திக்கொள்ளாதபட்சத்தில், எதிர்கால சந்ததியினரை இது பாதிக்கும். எனவே மக்கள் இது தொடர்பில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்” – என்றார்.

இதேவேளை குறித்த பொலித்தின் கழிவகற்றல் திட்டத்தின்படி முதற்கட்டமாக யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வட்டார ரீதியாக இன்று கழிவகற்றல் பணியை இராணுவம் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.