இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் என்ன? மத்திய அமைச்சர் விளக்கம்
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார்.
மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு, 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாகக் குறைக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், பெட்ரோல், டீசல் விலை நான்கு மடங்குக்கும் மேல் உயர்ந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே காரணம் என்றார். எனினும் மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலகட்டத்தை ஒப்பிடும்போது சர்வதேச சந்தையில் எல்.என்.ஜி.யின் விலை 37%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் 5% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய சர்வதேச நிலைமை என்ன என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சவுதி விலைப்படி, எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டரின் விலை ஏப்.2020 – மார்ச்.2022 காலகட்டத்தில் 285% அதிகரித்துள்ளது. ஆனால் இங்கு கடந்த 6 மாதங்களில் 37% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதே அரசின் முயற்சியாக இருக்கிறது’ என்றார்.
கப்பல் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்திற்கும், இந்திய துறைமுகங்கள் திருத்த மசோதாவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உலகளாவிய பொருளாதார நெருக்கடி 2008ல் ஏற்பட்டபோது, அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், நமது பொருளாதாரத்தை 6 ஆண்டுகள் பின்தங்கச் செய்துவிட்டதாக சாடினார். கடந்த காலங்களில் குறுகிய கால நன்மைகளுக்காக, தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், பிரதமர் மோடி குறுகிய கால ஆதாயங்களைப் பற்றி சிந்திப்பதில்லை என்றும் விளக்கமளித்தார்.
மாநிலங்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
முன்னதாக கேரளாவில் சில்வர்லைன் ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் இந்த பிரச்னையை கேரள காங்கிரஸ் எம்.பி.க்கள் இரு அவைகளிலும் எழுப்பினர்.
இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்த முழு விவரங்களையும் வழங்கும்படி காங்கிரஸ் எம்.பி வேணுகோபாலிடம் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.