பெருந்தோட்டக் கம்பனிகள் காட்டுமிராண்டித்தனம்! – திகாம்பரம் எம்.பி. கடும் கண்டனம்.
இரத்தினபுரி, வெள்ளந்துர தோட்டச் சம்பவம் மிலேச்சத்தனமானது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்த பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் வெள்ளந்துர தோட்டத்தில் ஒரு குடியிப்பாளரின் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மிலேச்சத்தனமானது. இது பெருந்தோட்டக் கம்பனிகளின் சர்வாதிகாரப் போக்கையும், அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டுகின்றது.
மாத்தளை – ரத்வத்த தோட்டத்தில் அசம்பாவிதம் நடந்து ஒரு மாதம்கூட செல்லாத நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது அரச கட்டுபாட்டுக்குள் பெருந்தோட்டக் கம்பனிகள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
200 வருடங்கள் அல்ல 300 வருடங்களானாலும் பெருந்தோட்டக் கம்பனிகளின் நடத்தைகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. அவர்களின் கடும் போக்கும் மாறப்போவதுமில்லை.
அரசும் இவாறான சம்பவங்கள் இடம்பெறும்போது வேடிக்கையாளர்களாக இருக்கின்றதே தவிர உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மாத்தளை – ரத்வத்தை சம்பவத்துக்குச் சரியான சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இவ்வாறு இடம்பெற்றிருக்காது.
தொடர்ந்தும் அரசு வேடிக்கை பார்க்காது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றுள்ளது.