இலங்கைக்கு முழுமையாக உதவுவோம் – சீனத் தூதுவர் கி ஷென் ஹொங் தெரிவிப்பு.

“இலங்கை இன்று கொந்தளிப்பான வர்த்தக உலகத்துக்குள் முழுமையாகச் சிக்கியுள்ளது. இலங்கையின் உரிமைகள் குறைமதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து மீள்வதற்கு சீனா இலங்கைக்கு உதவும்.”
இவ்வாறு இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென் ஹொங் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“எந்தப் பொருளாதார புயலாலும் பாதிக்கப்படாத வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியது இலங்கை அரசின் முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புகள் செல்வந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கும். மிகவும் வறிய நாடுகள் மோசமான தாக்கத்தை எதிர்கொள்ளும்.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் அபிவிருத்திக்கான இலங்கையின் உரிமை குறைமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பலவீனமான பொருளாதாரத்தின் மீது அதிகளவு அழுத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்கா தனது மேலாதிக்கத்தையும், அதிகார அரசியலையும் முன்னெடுப்பதற்காக வரிகளை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில், இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கவும், உலகளாவிய வர்த்தக பதற்றங்களை எதிர்கொள்வதற்கும் சீனா முழுமையான உதவிகளை இலங்கைக்குச் செய்யும்.
உலகளாவிய கண்டனங்களை மீறி அமெரிக்கா ஒரு வரிப்போரை முன்னெடுக்கின்றது. ஆதலால், உலகம் கொந்தளிப்பான புதிய காலகட்டத்தில் நுழைகின்றது. ஆனால், ஒருதலைப்பட்சமான இந்த பொருளாதாரப் போக்குகளை அடியோடு நிராகரிப்பதற்கான திறன் சீனாவுக்கு உள்ளது. இந்தப் புதிய பொருளாதாரப் போக்குகளுக்கு எதிராக வெற்றிபெறக்கூடிய நம்பிக்கையும் சீனாவிடம் இருக்கின்றது.
கொந்தளிப்பான உலகத்தை எதிர்கொள்ளும் இலங்கையும், தனது சொந்த சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை இன்னமும் உறுதியாகப் பாதுகாக்க வேண்டும். சீனா மிகவும் நம்பகரமான சகா என்பதை இலங்கை நம்பவேண்டும். அமைதி மற்றும் வளர்ச்சியின் போக்கை பின்பற்றவேண்டும். மேலும் புவிசார் அரசியல் கூட்டு மோதல்களையும் ஒருதலைப்பட்சவாதத்தையும் இலங்கை எதிர்க்க வேண்டும்.” – என்றார்.