வியட்நாம் ஜனாதிபதியால் அநுரவுக்கு அமோக வரவேற்பு – இரு தரப்பு பேச்சுகளும் முன்னெடுப்பு.

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்கினால் இன்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இன்று முற்பகல் வியட்நாம் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

வரவேற்பு நிகழ்வில், இரு தலைவர்களும் இலங்கை மற்றும் வியட்நாமின் தேசிய கீதங்களுக்கு மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் பிரதிநிதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான முன்னேற்ற மீளாய்வு, எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இந்தப் பயணத்தின் மூலம் அரசியல் நம்பிக்கையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நடைமுறை மற்றும் செயற்திறன்மிக்க ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

1970 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியதிலிருந்து வியட்நாமும் இலங்கையும் வலுவான மற்றும் தொடர்ச்சியான உறவுகளைப் பேணி வருகின்றன.

இலங்கை மற்றும் வியட்நாமின் வருடாந்த இருதரப்பு வர்த்தகம், முக்கியமாக ஏற்றுமதிகள், சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை எட்டியுள்ளது.

எதிர்வரும் வருடங்களில் இருதரப்பு வர்த்தகத்தை 01 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதை இரு தரப்பினரும் இலக்காகக் கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு வியட்நாமும் இலங்கையும் இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட அபிவிருத்தி இலக்குகளை பயன்படுத்தி உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் தயாராக உள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விஜயம், வியட்நாமுடனான பாரம்பரிய நட்புறவுக்கான இலங்கையின் வலுவான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதோடு, டிஜிட்டல் பரிமாற்றம், டிஜிட்டல் பொருளாதாரம், வலுசக்தி மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பாரம்பரிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், புதிய ஈடுபாட்டு வழிகளைத் திறப்பதற்கும் பகிரப்பட்ட உறுதியை இது பிரதிபலிக்கின்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.