இறம்பொடை பஸ் விபத்து: பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு.

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது.

கதிர்காமத்தில் இருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே நேற்று அதிகாலை 4:30 மணியளவில் விபத்துக்குள்ளானது.

மேற்படி விபத்தில் 35 இற்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் பஸ் சாரதியும் உயிரிழந்துள்ளார். அவர் பஸ்ஸில் இருந்து பல மணி நேரங்களுக்குப் பின் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பஸ் விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுகின்றன என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்து சாரதியின் கவனயீனத்தால் ஏற்பட்டதா, இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் கொத்மலை பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.