முப்பது வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றிக் கொண்டாட்டமா? – மனோ கணேசன் எம்.பி. கேள்வி.

இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவுகூரும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும். தெற்கில், வடக்கில் நிகழ்ந்த அரச மற்றும் அரசற்ற பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எதிரான வெற்றி கொண்டாட்டங்களையும் கூட கொண்டாடலாம். ஆனால், இந்த இலக்கை அடைய இலங்கை நாடு, முப்பது வருட காலம் யுத்தம் நிகழ்ந்தமைகான மூல காரணங்களை தேடி அறிந்து அவற்றுக்குத் தீர்வு தேட வேண்டும். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸ என்ற எவராக இருந்தாலும், தீர்வுகள் தேடா விட்டால், நாம் நின்ற அதே இடத்திலேயே நிற்போம். இதுதான் உண்மை.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள விசேட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை சமூகத்தில் சமூகத்தில் மரணித்துப் போன உறவுகள், இன்று முள்ளிவாய்க்காலிலும், தெற்கிலும் நினைவு கூரப்படுகின்றார்கள். தெற்கில் இராணுவ வெற்றி விழா நடத்தப்படுகின்றது. நினைவு கூரலும், வெற்றி விழாவும் ஒருசேர நடத்தலாம். அந்த நாள் வர வேண்டும்.

ஆனால், அந்த இலக்கை, முப்பது வருட காலம் யுத்தம் நிகழ்ந்தமைகான மூல காரணங்களைத் தேடி அறிந்து அவற்றுக்குத் தீர்வு தேடாமல் அடைய முடியாது.

1948 ஆம் வருட குடியுரிமை – வாக்குரிமை பறிப்புச் சட்டங்கள், சிங்களம் மட்டும் சட்டம், பண்டா – செல்வா மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் மற்றும் சந்திரிகாவின் 2000 ஆம் வருட தீர்வுத் திட்டம் ஆகியவை அகெளரவமான முறைகளில் உதாசீனப்படுத்தப்பட்டமை, 13 ஆம் திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்படாமை, பல இனங்கள், மதங்கள், மொழிகள் கொண்ட இலங்கையின் பன்முகத் தன்மை அங்கீகரிக்கப்படாமை, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல் செய்யப்படாமை, யுத்தத்தின் பின் மஹிந்த – பான் கி மூன் வெளியிட்ட கூட்டறிக்கை அலட்சியப்படுத்தப்பட்டமை ஆகிய தவறுகளைத் திருத்தி முன் நகர முடியாவிட்டால் எமது நாட்டின் தேசிய பயணம் நின்ற அதே இடத்திலேயே நிற்கும்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.