திஸ்ஸ விகாரை சட்டவிரோதம் என்று அரசு குழு தீர்ப்பளித்தால் ஏற்கத் தயார் அங்கு புதிய கட்டுமானம் எதுவும் நடைபெறாது என்றும் விகாராதிபதி நந்தாராம தேரர் உறுதி.
“தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகள் மக்களுக்குச் சொந்தமானவை. அங்கு விகாரை அமைக்கப்பட்டது சட்டவிரோதம் என்று அரசு அமைத்துள்ள விசாரணைக் குழு தீர்ப்பளித்தால் அதனை ஏற்கத் தயார்.”
இவ்வாறு தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் தெரிவித்தார்.
அத்துடன், “காணிப் பிரச்சினை தீர்க்கப்படும் வரையில் வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம்” என்றும் அவர் உறுதியளித்தார்.
தையிட்டி திஸ்ஸ விகாரையிள் உள்ள அவரின் வசிப்பிடத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள்தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் விகாராதிபதியாக நான் எதற்கும் இடமளிக்கவில்லை.
தெற்கில் இருந்து புத்தர் சிலை எடுத்து வரப்படுகின்றது என்றும், அன்றைய தினம் விசேட பெரஹரா நடைபெறவுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அவ்வாறான எதற்கும் நான் அனுமதி வழங்கவில்லை. அரசியல் நோக்கத்துக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்.
விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவென அரசால், புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் எமது விகாரைக்கான ஆவணங்களைக் கையளித்துள்ளோம். இதேபோன்று காணிகளைக் உரிமை கோரும் நபர்களும் தமது காணிகள்தான் என்பதற்கான ஆவணங்களைக் கையளித்துள்ளனர்.
இந்த விவாகரத்தில் இது ஒரு சட்டவிரோத செயல் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் அதனையும் ஏற்க நான் தயார். விகாரை காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை.
அரச குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு மதிப்பளித்து விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ளமாட்டோம்.” – என்றார்.
