“மனைவியைப் பராமரிப்பது கணவனின் முதன்மையான கடமை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!”

புதுடெல்லி,

ஜீவனாம்சம் என்பது ஒரு மாயையாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்ட சுப்ரீம்கோர்ட்டு, தனது மனைவியைப் பராமரிப்பது கணவரின் முதன்மையான மற்றும் தொடர்ச்சியான கடமையாகும் என்றும், மனைவி அவருடன் வாழ்வதற்கு ஏதுவாக அக்கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் ஆனது. சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனைவிக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தல் நடந்ததால் அந்த பெண் திருமணமான ஒரு ஆண்டுக்குள்ளேயே தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

தொடர்ந்து கணவரை பிரிந்து வாழும் அந்த பெண், தனது செலவுக்காக கணவரிடம் இருந்து மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் பெற்றுத்தருமாறு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட்டு, அந்த பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. இந்த தொகையை அதிகரித்து தரக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உத்தரகாண்ட் ஐகோர்ட்டு ரூ.15 ஆயிரமாக உயர்த்தியது.

ஆனால் இதை எதிர்த்து மீண்டும் அந்த பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சய் கரோல், அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், பெண்ணுக்கான பராமரிப்புத் தொகையை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டனர்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ஒருவர் தனது மனைவியை பராமரிப்பது மாயைபோல இருக்கக்கூடாது. கணவன் தனது மனைவியை பராமரிப்பது அவரது முதன்மை மற்றும் தொடர்ச்சியான கடமை ஆகும். மனைவி கண்ணியத்துடன் வாழும் வகையிலும், திருமண உறவு இணக்கமாக இருந்த காலத்தில் அனுபவித்தது போன்ற தரத்திலும் அதை செய்ய வேண்டும்’ என தெரிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட தரப்பினரின் தகுதிக்கு ஏற்ப, மனைவி நியாயமாகவும், கண்ணியத்துடனும் தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், அதேநேரம் அதிகப்படியான சுமையை ஏற்படுத்தாமல் இருப்பதும் அவசியமாகும் என்றும் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.