மழையின் வீரியம் குறையும்! – நாளை மாலை முதல் காலநிலை சீராகும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவிப்பு.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் மழையுடனான காலநிலை நாளை வெள்ளிக்கிழமை மாலை முதல் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்தார்.
தற்போது நிலவி வரும் குறைந்த அழுத்த மண்டலத்தின் தாக்கம் நாளை மாலை அளவில் குறைவடைவதால், அதன் பின்னர் மழையின் வீரியம் பெருமளவு தணியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று மழையின் அளவில் ஓரளவு குறைவு தென்பட்ட போதிலும், நாட்டின் சில பகுதிகளில் இன்னும் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
மேல் மற்றும் சபரகமுவா மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும்.
தெற்கு மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழையுடனான வானிலை இன்றும் தொடரலாம்.
மத்திய மாகாணத்தின் சில இடங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மழையின் தாக்கம் முழுமையாகக் குறையும் வரை பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
