ரூ.11.82 கோடி கஞ்சா கடத்திய கேரள மாடல் அழகி கைது

மும்பை: தாய்லாந்தில் இருந்து மும்பை வந்திறங்கிய 28 வயது மாடல் அழகி ஒருவர், 11 கிலோவுக்கும் அதிகமான உயர்தர கஞ்சா கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கேரளாவை சேர்ந்த மாடல் அழகி ஹர்ஷா சன்னி. இவர் ‘மிசஸ் கேரளா’ 2025 போட்டியில் பங்கேற்றவர் ஆவார். இந்நிலையில் ஹர்ஷா சன்னி, தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் முலம் கடந்த புதன்கிழமை நள்ளிரவு மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினார்.

அப்போது அவரது நடத்தை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால் விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பிறகு அவரது டிராலி பையை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் “பச்சை நிறப் பொருள்” நிறைந்த 12 சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து என்டிபிஎஸ் கருவியை பயன்படுத்தி நடத்தப்பட்ட ரசாயனப் பரிசோதனையில், அது உயர்தர ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ என்பது உறுதியானது.

11 கிலோவுக்கும் அதிக எடையுள்ள இந்த உயர்தர கஞ்சாவின் மதிப்பு ரூ.11.82 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹர்ஷா சன்னி, மும்பை ஃபோர்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்த போதைப்பொருள் யாருக்கு விநியோகம் செய்யப்பட இருந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.