மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள் ரூ. 16.2 கோடிக்கு ஏலம்!
மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்களின் பிரதி ரூ. 16.2 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரரான ஆனந்த் டி ஹிங்கோரனி, மகாத்மா காந்தி மிகவும் நெருக்கமானவராகவும் அவரின் சீடராகவும் இருந்தார். இதனிடையே, ஹிங்கோரனியின் மனைவி இறந்த நிலையில், அவருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் வழிகாட்டுதலுக்காகவும் அவருக்கு மகாத்மா காந்தி தொடர்ந்து கடிதங்கள் எழுதினார்.
அகிம்சை, உண்மை, அச்சமின்மை, தீண்டாமை ஒழிப்பு, மத சமத்துவம், உழைப்பு, சேவை, இறைவனைத் தேடுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக 688 கடிதங்கள் எழுதியுள்ளார்.
மகாத்மா காந்தி எழுதிய இந்தக் கடிதங்கள் உள்பட கையெழுத்து பிரதிகள், புகைப்படங்கள், தனிப்பட்ட பொருள்கள் என 86 தொகுப்புகள் வியாழக்கிழமையில் ஏலம் விடப்பட்டன.
மும்பையில் நடந்த இந்த ஏலத்தில் காந்தி எழுதிய கடிதங்கள் உள்ளிட்டவை ரூ. 16.2 கோடிக்கு ஏலம் போனது. மேலும், ஏலத்தில் விற்கப்பட்ட இந்திய வரலாற்று ஆவணத்துக்கான உலக சாதனையையும் இந்த ஏலத்தில் படைக்கப்பட்டுள்ளது.
