யாழ். பண்டத்தரிப்பு ஆலயத் திருவிழாவில் லேசர் ஒளிக்கீற்றுத் தாக்கம்: 400 இற்கும் மேற்பட்ட மக்கள் கண் பாதிப்புடன் போதனாவில் – வைத்தியசாலையில் அவசர நிலை.
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு – பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கீற்று மற்றும் வாணவேடிக்கை காரணமாகக் கண் பாதிப்படைந்த 400 இற்கும் மேற்பட்டோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டத்தரிப்பு – பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் நேற்று (20) இரவு உற்சவத்தின்போது அதிக வாணவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு, இசை நிகழ்வின்போது அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்று வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே பொதுமக்கள் பலரது கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான பணிகள் குறைக்கப்பட்டு, இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஏனைய வைத்தியசாலைகளில் இருந்தும் வைத்தியர்களும் தாதியர்களும் வரவழைக்கப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்ட இந்த ஆலயத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.
இதனால் ஆலய நிர்வாகம் நீதிமன்றப் பொறுப்பில் உள்ள காரணத்தால் இம்முறை திருவிழா நீதிமன்றப் பதிவாளரின் தலைமையிலேயே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




