பொகவந்தலாவையில் மரம் முறிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

நுவரெலியா, நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேல் பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல் பிரிவு தோட்டப் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மரத்தின் பாரிய கிளை ஒன்று முறிந்து மேற்படி நபரின் தலைப்பகுதியில் விழுந்துள்ளது. பலத்த காயங்களுக்குள்ளான அவரைப் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவர் 52 வயதுடைய கண்டிப் பகுதியைச் சேர்ந்த ஆர்.பி.பி. சரத்வீரசிங்க என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையிலிருந்து சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.