வட மாகாணத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தித் திட்டங்கள் – ஆளுநர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் திட்டங்களை விரைவாகத் தயாரித்து முன்வைக்கும் அளவுக்கேற்ப மேலதிக நிதியையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, அனைத்து தொடர்புடைய திணைக்களங்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, திட்டங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
உலக வங்கியின் நிதியுதவியுடன், மத்திய விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் ஆரம்பக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் வடக்கு மாகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. திட்டத்தின் நோக்கம், வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள், தற்போதைய முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜி.பாலகுமார் வரவேற்புரையாற்றியதுடன், திட்டப் பணிப்பாளர் ஆர்.எச்.டபிள்யூ.ஏ.குமாரசிறி திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள், நிதி அமைப்பு, நடைமுறைப்படுத்தல் அணுகுமுறை மற்றும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் தொடர்பான விரிவான முன்வைப்பைச் செய்தார். இதன் போது, 120 மில்லியன் அமெரிக்க டொலர் திட்ட நிதிக்கு மேலதிகமாக 67 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளதாகவும், திட்டங்களை எவ்வளவு விரைவாகத் தயாரித்து முன்வைத்து நடைமுறைப்படுத்துகின்றோமோ அதற்கேற்ப மேலதிக நிதியையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுக் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம் 2030ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் பிரதான நோக்கம், விவசாய–உணவு உற்பத்தியாளர்களின் உற்பத்தித்திறன், சந்தை அணுகல் மற்றும் காலநிலைத் தாங்குதிறனை அதிகரிப்பதாகும்.
திட்டத்தின் கீழ் காலநிலைக்கேற்ற விவசாய நுட்பங்கள், உற்பத்திப் பொருட்களுக்கு பெறுமதி சேர்த்தல், சந்தை ஒருங்கிணைப்பு, இளைஞர் மற்றும் பெண்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், நீர்வள முகாமைத்துவம், நீர்ப்பாசனம், இயற்கை வளப் பாதுகாப்பு, விவசாயத் தரவுகள், அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திட்டப் பணிப்பாளரின் முன்வைப்பில் தெரிவிக்கப்பட்டது.
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப விவசாய உற்பத்தியைப் பாதுகாப்பதுடன், உற்பத்தியாளர்களைச் சந்தையுடன் வலுவாக இணைத்து அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், நீர்ப்பாசன மற்றும் வடிகால் வசதிகளை மேம்படுத்துவதற்கும் திட்டத்தில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை, உற்பத்திப் பங்காளித்துவத்தின் ஊடாக விவசாயிகளுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் நிதி மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் அமைப்புகளிடமிருந்தும் இளைஞர் மற்றும் பெண்கள் தொழில் முயற்சியாளர்களிடமிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட முன்மொழிவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் சேதமடைந்துள்ள சிறு நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் கால்வாய்களைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சுமார் 74 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அவற்றை கேள்விக்கோரலுக்கு உட்படுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது நடைபெற்ற பங்குதாரர் கலந்துரையாடலில், விவசாயிகள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. கடன் பெறுவதற்கான நடைமுறைகள், விவசாயிகளின் அணுகல் மற்றும் திட்டத்தின் நிதியுதவி பொறிமுறையுடன் அவற்றை இணைக்கும் வழிமுறைகள் தொடர்பில் விரிவாகப் பதிலளிக்கப்பட்டு, நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், திட்டத்தின் ஆரம்பக் கூட்டத்துக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த திட்டப் பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினரை வரவேற்றார். வடக்கு மாகாணத்தில் இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு தொடர்புடைய அனைத்து திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த செயற்பாடும் துரிதமான நிர்வாக நடவடிக்கைகளும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, வனவளத் திணைக்களத்தின் ஒத்துழைப்பு இத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலில் கூடுதலாகத் தேவைப்படுகின்றது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். திட்டங்களுக்குத் தேவையான அனுமதிகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் தேவையற்ற காலதாமதமின்றி முன்னெடுக்கப்படுவதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து காலாண்டுக்கு ஒருமுறை மீளாய்வுக் கலந்துரையாடல் நடத்துவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் திட்டங்களின் முன்னேற்றம், எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படவுள்ளன.
மேலும், வடக்கு மாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், நீர்வளங்களைச் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து நீண்டகால பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு இத்திட்டம் முக்கிய வாய்ப்பாக அமையும் எனக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட செயலர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், தொடர்புடைய பிரதேச செயலர்கள், மாவட்ட விவசாய அதிகாரிகள், நீர்ப்பாசன அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
